இலங்கையர்களுக்கு ஆச்சரியம் காத்திருக்கிறதாம்! அரசாங்கம் அறிவிப்பு
முன்வைக்கப்படவுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தை பார்த்து மக்கள் ஆச்சரியமடைவார்கள் என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன்(Janaka Bandara thennakoon) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
அரசியல் வரலாற்றில் இதுவரையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு-செலவு திட்டத்தை காட்டிலும் சிறந்த வரவு-செலவு திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும். வரவ-செலவு திட்டத்தின் உள்ளடக்கங்களை கண்டு நாட்டு மக்கள் ஆச்சரியமடைவார்கள்.
வரவு- செலவு திட்டம் பல சிறந்த அம்சங்களை கொண்டுள்ளது. அதன் இரகசியத்தை குறிப்பிட முடியாது.
வரவு-செலவு திட்டத்தின் ஊடாக அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு இம்முறை வழங்கப்படும். மாகாண சபை தேர்தலை தற்போது நடத்த முடியாது. அதற்கான சாத்தியமும் கிடையாது.
மக்களின் சுகாதார பாதுகாப்பினை கருத்திற் கொண்டு மாகாணசபை தேர்தல் நடத்துவது குறித்து ஆராயப்பட வேண்டும். எதிர்க்கட்சி தலைவருக்கு தேவையாயின் தேர்தலை நடத்திக் கொள்ளட்டும், நாங்கள் தேர்தலை தற்போது நடத்தமாட்டோம்.
தம்புள்ளை மாவட்ட மக்களின் காணிகளை பிற தரப்பினருக்கு வழங்க ஒருபோதும் இடமளிக்க முடியாது.
தேசிய வளங்களை பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு. காடழிப்பு குறித்து அதிக அவதானம் செலுத்தப்பட்டு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார்.