ஜப்பான் போர் விமானம் மாயம்
ஜப்பானின் போர் விமானம் ஒன்று காணாமல் போயுள்ளதாக ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜப்பானிய விமான சுய பாதுகாப்பு படைக்கு சொந்தமான எஃப்-15 ரக விமானமே இவ்வாறு காணாமல் போயுள்ளது. இது சம்பந்தமாக ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
விமானம் புறப்பட்டு சில நொடிகளில் அதனுடனான தகவல் துண்டிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
காணாமல் போன விமானத்தில் இரண்டு விமானப் படையினர் பயணித்துள்ளனர். இஷிகாவா மாகாணத்தில் அமைந்துள்ள கோமட்சூ விமானப் படை முகாமில் இருந்து விமானம் புறப்பட்ட பின்னர், தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் அப்போது விமானம் ஜப்பானில் இருந்து 5 கிலோ மீற்றர் தொலைவில் கடல் பகுதியை நோக்கி பறந்துக்கொண்டிருந்தது.
விமானத்திற்கு என்ன நடந்தது என்பது கண்டறியப்படாத நிலையில், அது கடலில் விழுந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த சந்தேகம் காரணமாக கரையோர பாதுகாப்பு படையின் சில படகுகள், விமானத்திடம் இருந்து இறுதியாக தொடர்புகள் கிடைத்த கடல் எல்லை நோக்கி புறப்பட்டு சென்று தேடுதல்களை நடத்தி வருகின்றன.
