சிறிலங்கா அரச தலைவரைச் சந்தித்த ஜப்பானியத் தூதுவர்! பேசப்பட்ட விடயம் என்ன?
தனது சேவைக் காலத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் சுகியாமா அக்கிரா (Sugiyama Akira) சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவை (Gotabaya Rajapaksa) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இச்சந்திப்பானது அரச தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளதாக அரச தலைவரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தொடர்ந்தும் அந்த செய்தியில்,
ஆறு இலட்சம் அஸ்ட்ரா செனெக்கா தடுப்பூசிகளை ஜப்பானிலிருந்து பெற்றுக்கொள்வதற்கும் கொரோனா தொற்றொழிப்பை வெற்றிகரமாக்கிக் கொள்வதற்கும், சுகியாமா அக்கிரா பல்வேறு வழிமுறைகளில் இந்நாட்டுக்குப் பெற்றுக் கொடுக்கப்பட்ட சேவைகளுக்கு அரச தலைவர் இதன்போது பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இதன்போது ஜப்பானிய தூதுவர் கருத்து வெளியிடுகையில்,
இரு நாடுகளுக்கு இடையிலான நட்புணர்வை பலப்படுத்திக்கொண்டு, தேவைப்படும் எந்தவொரு தருணத்திலும் இலங்கைக்கான ஒத்துழைப்பு வழங்கத் தான் முயற்சிப்பதாக, அரச தலைவரிடம் தெரிவித்தார்.
சிறிலங்கா அரச தலைவர் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர (BP Jayasundera) மற்றும் ஜப்பானியத் தூதரகத்தின் பிரதித் தலைவர் கட்சுகி கொட்டாரோ (Katsuki Kotaro) ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
