தமிழகம் எங்களின் தொப்புள்கொடி உறவு - ஜீவன் தொண்டமான்
சிறிலங்காவில் சில தரப்பினர் இந்தியா பற்றி மக்கள் மத்தியில் தவறாக பரப்பி அரசியல் செய்கிறார்கள் என ஜீவன் தொண்டமான் இந்திய ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா தொழிலாளர் காங்கிரசின் பொதுச் செயலாளரும், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சருமான ஜீவன் தொண்டமான், இந்தியாவுக்கு ஒரு வாரகாலம் பயணம் மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து விட்டு, சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் சந்தித்து பேசியமை குறிப்பிடத்தக்கது.
தமிழக முதலமைச்சருடனான சந்திப்பு
இந்தியாவிற்கான தனது பயணத்தை முடித்து கொண்டு சென்னையில் இருந்து சிறிலங்காவிற்கு புறப்படுவதற்காக சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு வருகை தந்த ஜீவன் தொண்டமான் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில்
“சிறிலங்காவின் 13ஆவது திருத்தம் தொடர்பான சிறிலங்கா அதிபரின் ஆவணத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கி உள்ளோம்.
சிறிலங்கா மலையக மக்களின் வளர்ச்சிக்காக இந்தியா 750 மில்லியன் ரூபாய் வழங்கியுள்ளது. இதற்காக இந்திய மக்களுக்கும், மத்திய அரசுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். அதில் தமிழக அரசை, சிறிலங்கா மக்களின் வளர்ச்சிக்காக உதவிகள் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளோம்.
இந்தியா - சிறிலங்கா உறவு
ஆயிரக்கணக்கான வருடங்களாக இந்தியா- சிறிலங்கா இடையே தொடர்பு இருந்து வருகிறது, கடந்த 50 ஆண்டுகளில்தான் அரசியலாக மாறி பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. இந்தியாவும் சிறிலங்காவும் கலாசார, பொருளாதார ரீதியாக தொடர்பு கொண்ட நாடுகள்.
தமிழகத்தில் இருந்து அடிமைகளாக போனவர்கள்தான் மலையக மக்கள், தமிழகம் எங்களின் தொப்புள் கொடி உறவு. தமிழக அரசு எங்களுக்கு எந்தெந்த உதவி செய்ய முடியுமோ அது சம்பந்தமாக முதலமைச்சரிடம் பேசி உள்ளேன்.
இந்தியா - சிறிலங்கா இடையே உள்ள உறவு பலமானது.வேறு நாடுகளுடன் நெருக்கமான உறவு இருக்காது. சிறிலங்காவில் சில தரப்பினர் இந்தியா பற்றி மக்கள் மத்தியில் தவறாக பரப்பி அரசியல் செய்கிறார்கள், பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது உண்மையான நண்பன் யார்? என தெரியவந்தது.
பிரதமருடனான சந்திப்பு
இந்திய ரூபாயை டொலர், யூரோ போன்று சிறிலங்காவில் பொதுப் பணமாக பயன்படுத்த ஆலோசனை செய்து வருகிறோம்.
பிரதமரை சந்தித்தபோது இந்தியாவின் எண்ணிம பரிவர்த்தனை முறையான யு.பி.ஐ. பண பரிவர்த்தனை முறையை சிறிலங்காவில் பயன்படுத்துவது குறித்து ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.“
என்றவாறு தெரிவித்தார்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)