மதுரோ மற்றும் மனைவியை சிறை பிடித்த அமெரிக்கா - ஐ.நா செயலாளரின் நிலைப்பாடு
வெனிசுலா தொடர்பில் அமெரிக்கப் படைகள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது சர்வதேச சட்ட விதிகளை மதிக்காமை குறித்து தான் ஆழ்ந்த கவலையடைவதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
இன்று (05) நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் செயலாளர் நாயகம் விடுத்த உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றிலேயே இதனை வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுவதற்கு சர்வதேச சட்டமே அடிப்படை அத்திவாரமாகும் என அவர் அங்கு சுட்டிக்காட்டினார்.
நாட்டினுள் ஸ்திரமற்ற நிலை
வெனிசுலா தலைவர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ப்ளோரஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள் குறித்தும் செயலாளர் நாயகம் குட்டரெஸ் தீவிர அவதானம் செலுத்தியுள்ளார்.

இச்சம்பவங்கள் காரணமாக நாட்டினுள் ஸ்திரமற்ற நிலை மேலும் தீவிரமடைதல் மற்றும் அது பிராந்தியத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து தான் ஆழ்ந்த கவலையில் உள்ளதாக ஐ.நா செயலாளர் நாயகம் இங்கு மேலும் குறிப்பிட்டார்.
வெனிசுலா பல தசாப்தங்களாக உள்ளக ஸ்திரமற்ற நிலை, சமூக மற்றும் பொருளாதார குழப்பங்களை அனுபவித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் வெனிசுலாவில் ஜனநாயகம் கடுமையாக பலவீனமடைந்துள்ளதுடன், மில்லியக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருவதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் இங்கு குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |