மீண்டும் கொட்டப்போகும் மழை : யாழ் பல்கலை பேராசிரியரின் கணிப்பு
வடக்கு - கிழக்கு மாகாணங்களில் நாளை முதல் வேகமான காற்று வீசுகையும் மிகமிகக் கனமழையும் பெய்யக்கூடும் என்று காலநிலை அவதானிப்பாளரும் யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை பேராசிரியருமான நா. பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இதனால் தாழ்நில பகுதி மக்கள் வெள்ளம் குறித்து அவதானமாக செயல்பட வேண்டும் என்று நா. பிரதீபராஜா குறிப்பிட்டுள்ளார்.
காலநிலை அவதானிப்பு தொடர்பில் அவர் வெளியிட்ட பதிவிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
காற்றழுத்த தாழ்வு நிலை
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டவை வருமாறு, வங்காள விரிகுடாவில் இலங்கையின்பொத்துவிலுக்கு தென்கிழக்கு திசையில் 664 கி.மீ. தொலைவில் காணப்படும் காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று தற்போது நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியுள்ளது.

இது, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இலங்கையின் கிழக்கு மாகாண கரையோரமாக வடக்கு நோக்கி நகர்ந்து வடக்கு மாகாணத்தை அண்மித்து மேலும் வடக்கு நோக்கி நகர்ந்து தமிழ்நாட்டை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தாழமுக்கமும் இலங்கைக்கு மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலை உள்ளது. தற்போது வடக்கு, கிழக்கு, வட மத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங் களுக்கு பரவலாக மிதமான மழை கிடைத்து வருகிறது.
நாளை வியாழக்கிழமை முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கு, ஊவா, வட மத்திய, மத்திய மற்றும் தென் மாகாணங்கள் முழுவதும் மிகமிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
பல தாழ்நில பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயமுள்ளது. முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், திருகோணமலை, கிளிநொச்சி. மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் 8,9, 10, 11 ஆம் திகதிகளில் மிக மிகக் கனமழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மிதமானது முதல் கனமானது மழை
குறிப்பாக - முல்லைத்தீவு யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் நாளை முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை திரட்டிய மழைவீழ்ச்சியாக 450 மி.மீ. க்கு மேல் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

நாளை முதல் எதிர்வரும் 13ஆம் திகதி வரை வடமேற்கு, மேற்கு, சபரகமுவா மாகாணங்களுக்கு பரவலாக மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கக்கூடும்.
இது தற்போது தாழமுக்கமாகக் காணப்பட்டாலும் இலங்கை கரையை அண்மிக்கும் போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதனால் நாளை முதல் கிழக்கு, வடக்கு வடமத்திய ஊவா மாகாணங்களில் காற்றின் வேகம் மணிக்கு 60 கி.மீற்றரை விடக் கூடுதலாக வீசக்கூடும்.
நிலச்சரிவு
மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கனமழை கிடைக்கும் என்பதனால் நிலச்சரிவு அனர்த்தங்களும் நிகழக்கூடும்.

வடக்கு, கிழக்கு, வட மத்திய, மத்திய, மற்றும் ஊவா மாகாணங்களின் மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச நிர்வாக அதிகாரிகள் முன்கூட்டியே மக்களுக்கு இந்தக் கனமழை தொடர்பிலும் வெள்ள அனர்த்தங்கள் மற்றும் நிலச்சரிவுகள் தொடர்பிலும் தெரியப்படுத்துவதன் மூலம் பாதிப்புகளைக் குறைக்க முடியும்.
இந்தத் தாழமுக்கத்தை சாதாரண நிகழ்வாகக் கருத வேண்டாம். மிக வேகமான காற்றோடு கூடிய மிகக் கனமழை ( இடி, மின்னலும் இணைந்ததாக) மோச மான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். மிக முக்கியமாக இது தாழமுக்கம் தாழ்வு மண்டலத்தோடு இணைந்த நிகழ்வு என்பதனால் வழமையை விட கடல் மட்டம் மிக உயர்வாக காணப்படும்.
ஆகவே, சாதாரண காலங்களில் வெள்ளநீர் கடலுக்குள் செல்வது போல இக்காலத்தில் வெள்ள நீர் கடலுக்கு செல்லாது. ஆகவே இதனையும் கருத்தில் கொண்டு செயல்படுவது சிறந்தது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
லசந்தவுக்கான நீதியை வழங்குமா அநுர அரசு! 15 மணி நேரம் முன்