கொரியாவில் இலங்கையர்களுக்கான வேலை வாய்ப்பு: வெளியான மகிழ்ச்சி தகவல்
தென் கொரியாவில் (South Korea) பருவகால வேலைவாய்ப்புகளை E-8 விசா பிரிவின் கீழ் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.
குறித்த விடயத்தை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த வேலை வாய்ப்பு திட்டத்திற்கான முன்மொழிவு தற்போது அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அனுமதி கிடைத்தவுடன் தென் கொரிய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) கையெழுத்திடப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வேலை வாய்ப்புகள்
இந்தநிலையில் நான்கு தென் கொரிய மாகாணங்களுடன் MoU கையெழுத்திட தேவையான ஏற்பாடுகள் முடிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜூலை பத்தாம் திகதிக்குள் ஒப்பந்தங்களை இறுதி செய்து, இந்த மாத இறுதிக்குள் E-8 விசா கீழ் முதல்குழு தொழிலாளர்களை தென் கொரியாவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வேலை வாய்ப்புகள் முழுமையாக அரசாங்கம் மூலமாகவே நடத்தப்படும் என்றும் தனியார் தரகர்கள் எந்தவிதமான பங்கு வகிக்க முடியாது என்றும் அவர் வலியுருத்தியுள்ளார்.
வேலை தேடுபவர்கள்
வேலை தேடுபவர்கள் இடைத்தரகர்களிடம் பணம் செலுத்த வேண்டாம் என்றும் பாதுகாப்பாக இருக்குமாரும் அவர் எச்சரித்துள்ளார்.
சில சமூக ஊடகங்கள் திட்டம் நிறுத்தப்பட்டதாக போலியான தகவல்கள் பரப்புவதாகவம் உண்மையில் திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருப்பது முறையான சட்ட நடைமுறைகளை முடிப்பதற்காக எனவும் அமைச்சரவை ஒப்புதல் கிடைத்ததும் MoU கையெழுத்துகள் மூலம் திட்டம் நடைமுறைக்கு வரும் எனவும் கோசல விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, ஆட்சேர்ப்பு செயல்முறை முற்றிலும் வெளிப்படையாகவும் தகுதியின் அடிப்படையில் மட்டுமே நடைபெறும் என்றும் அனைத்து தகவல்களும் பொதுமக்களுக்கு திறந்தவையாக வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
E-8 விசா திட்டம் தென் கொரியாவின் விவசாயம் மற்றும் தொடர்புடைய துறைகளுக்கான குறுகிய கால தொழிலாளர் தேவையை நிறைவேற்றுவதுடன், இலங்கையர்களுக்கு சட்டபூர்வமாக வெளிநாடுகளில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
