காட்டெருமையை பரிசளித்தார் ஜோ பைடன்
அமெரிக்க அரச தலைவர் ஜோ பைடன் தனது ஐரோப்பிய பயணத்தை முடித்த பின்னர் மீண்டும் அமெரிக்கா திரும்பியுள்ளார். இறுதியாக நேற்று அவர் ஜெனீவாவில் ரஷ்ய அரச தலைவர் விளடிமிர் புட்டினுடன் நேருக்கு நேர் பேச்சுக்களை நடத்தியிருந்தார்.
2018 ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் முறையாக இரண்டு நாட்டு தலைவர்களுக்கு இடையிலும் இவ்வாறு நேரடிப் பேச்சுக்கள் நடத்தப்பட்ட போதிலும் அதில் சிறிய அளவான உறுதியான முன்னேற்றமே ஏற்பட்டுள்ளது.
மூன்று மணித்தியாலத்திற்கும் அதிக நேரம் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தை குறித்து இரண்டு நாட்டுத் தலைவர்களும் திருப்தியை வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்க அரச தலைவரால் கருத்து வேறுபாடுகள் குறித்து ரஷ்ய அரச தலைவருக்கு எடுத்துரைக்கப்பட்ட போதிலும் அது கடும் தொனியில் அமையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் புதிய பனிப்போர் ஒன்றை ரஷ்ய விரும்பவில்லை எனவும் அமெரிக்க அரச தலைவர் ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார். ஜோ பைடன், அனுபவமிக்க ஒரு அரச தலைவர் எனவும் இருவரும் ஒரே சிந்தனை மற்றும் அணுகுமுறையுடன் பேச்சு நடத்தியதாகவும் கூறியுள்ளார்.
பேசுவதில் அதிக நேரத்தை செலவிடுவதை விடுத்து, ரஷ்யாவுடனான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான உண்மையான எதிர்பார்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளதாக ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.
ஆயினும் இந்த சந்திப்பின் போது புட்டின் ஒரு பெரிய இராஜதந்திர வெற்றியைப் பெற்று ரஷ்யாவுக்கு பயணமாகியதாகவே தெரிகிறது. இந்த ராஜதந்திர சோதனையில் ஜோ பைடன் தோல்வியுற்றதாகவும் குறிப்பாக மனித உரிமை மீறல்களுக்கு புட்டினைப் பொறுப்பேற்க பைடன் தவறியதால் புட்டினின் வியூகத்தில் பைடன் சரிவர பொருந்தவில்லை எனவும் கருதப்படுகிறது.
இந்த சந்திப்பின் போது ஜோ பைடன் தமக்கு விரும்பமான ஏவியேட்டர் சன்கிளாஸ் எனப்படும் குளிர் மூக்குகண்ணாடி மற்றும் காட்டெருமை சிற்பம் ஒன்றை ரஷ்ய ஜனாதிபதிக்கு பரிசை வழங்கினார். ஆனால் பதிலுக்கு ரஷ்ய தலைவர் என்ன வழங்கினார் என்பது இதுவரை தெரியவில்லை.
2018 இல், டொனால்ட் ட்ரம்புக்கு புட்டினின் கால்பந்து ஒன்றை பரிசாக வழங்கிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும் அணு ஆயுதக் கட்டுப்பாடு குறித்த அமெரிக்க ரஷ்யப்பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிக்கவும் மீளெடுக்கபட்ட இருதரப்பு தூதர்களை மீண்டும் ராஜதந்திர பணிக்கு அனுப்பவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.