மட்டக்களப்பில் கால்நடைப் பண்ணையாளர்களின் தொழுவங்கள் உடைப்பு
மட்டக்களப்பு , பட்டிப்பளை - கெவுளிமடு மேய்ச்சல்தரைப் பகுதியில் தமது கால்நடைகளைப் பராமரித்து வரும் பண்ணையாளர்களுக்கு எதிராக வனவளத் திணைக்களத்தினர் தொடர்ச்சியாக வழக்குகளைப் பதிவு செய்து அச்சுறுத்தி வருவதாக அப்பகுதிப் பண்ணையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
காடுகளுக்குள் கால்நடைகளை விடுவித்ததாகத் தெரிவித்து, அண்மைக்காலமாகப் பண்ணையாளர்கள் மீது வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக, நேற்றும் (19.11.2026) பண்ணையாளர் ஒருவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வனவளத் திணைக்கள அதிகாரிகள்
இந்நிலையில், வெள்ளிக்கிழமை (20.11.2026) மீண்டும் அப்பகுதிக்குச் சென்ற வனவளத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிலர் இணைந்து, அங்கு மாடுகள் அடைக்கப்பட்டிருந்த தொழுவத்தை உடைத்துச் சேதப்படுத்தியதுடன், அதிலிருந்த தடிகளை உழவு இயந்திரத்தில் ஏற்றிச் சென்றுள்ளதாகப் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், தொழுவம் உடைக்கப்பட்டு மாடுகள் காட்டுக்குள் விரட்டியடிக்கப்பட்டதாகவும், இதன்போது ஏற்பட்ட அச்சம் காரணமாகப் பண்ணையாளர்கள் உயிர்பிழைப்பதற்காகக் காடுகளுக்குள் ஓடி ஒளிந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதன்போது, பண்ணையாளர்கள் அப்பகுதியில் தங்கியிருப்பதற்காக அமைத்திருந்த சிறிய கொட்டகையையும் உடைப்பதற்கு வனவளத் திணைக்களத்தினர் முற்பட்டனர்.
எனினும், அங்கிருந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் அது என்னுடையது, உடைக்க வேண்டாம் எனத் தெரிவித்ததையடுத்து, அந்தக் கொட்டகையை விட்டுவிட்டு மாடுகளை அடைத்திருந்த ஏனைய அனைத்துத் தடிகளையும் உடைத்து எடுத்துச் சென்றுள்ளனர்.
அத்துடன், இப்பகுதி வனப்பகுதியாகும். இங்கு மாடுகளை மேய்க்க முடியாது. இரண்டு நாட்களுக்குள் அனைத்து கால்நடைகளையும் எடுத்துக் கொண்டு இங்கிருந்து வெளியேற வேண்டும்.
அவ்வாறு வெளியேறாவிட்டால், தற்போது ஓடி ஒளிந்துள்ள குறித்த நபருக்கு எதிராக மீண்டும் வழக்குப் பதிவு செய்யப்படும்" என அங்கிருந்த நபரிடம் எச்சரித்துவிட்டு வனவளத் திணைக்களத்தினர் அங்கிருந்து சென்றுள்ளதாகப் பண்ணையாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |