சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தலுக்கு தடை கோரிய வழக்கு : நீதிமன்றின் உத்தரவு
யாழ்ப்பாணம் சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்ள தடைசெய்ய கோரி ஊர்காவற்துறை காவல்துறையினரால் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு, இன்றைய தினம் (20) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த சட்டத்தரணி க.சுகாஸ், இன்றைய தினம் (20) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் எதிர்வரும் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு எதிராக தடை கோரி ஊர்காவற்துறை காவல்துறையினரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
முன்வைக்கப்பட்ட வாதம்
இந்த வழக்கிவே பிரதிவாதிகளாக நானும் ஊர்காவற்துறை சட்டத்தரணிகள் சங்கத்தைச் சேர்ந்த சட்டத்தரணிகளும் முன்னிலையாகியிருந்தோம்.

இறந்த உயிர்களை நினைவுகூருவது எந்தவொரு சட்டத்தாலும் தடுக்கப்பட முடியாது என்றும், அந்த உரிமை இலங்கையினுடைய அரசியல் அமைப்பின் பிரகாரமும் சர்வதேச சட்டங்களின் பிரகாரமும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது என்றும் எங்களுடைய இறந்த உயிர்களை நாங்கள் நினைவேந்துவது எங்களுடைய பிறப்புரிமை என்றும் வாதிட்டோம்.
எங்களுடைய வாதங்களை செவிமடுத்த நீதிமன்றம், அதாவது தடை செய்யப்பட்ட அமைப்புகளின் சின்னங்களையோ இலட்சினைகளையோ பயன்படுத்தாமல் இறந்தவர்களை நினைவேந்துவது சட்டவிரோதமாகாது என்று தற்போது கட்டளையை வழங்கியிருக்கின்றது.
ஆகவே எங்களுடைய நினைவேந்தும் உரிமை உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.” என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |