சட்டவிரோத சொகுசு கார் வழக்கு: ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு
🛑புதிய இணைப்பு
சட்டவிரோதமாக சொகுசு வாகனமொன்றைத் தம்வசம் வைத்திருந்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் தீர்ப்பு இன்று (25-11-2026) அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவானினால் அறிவிக்கப்பட்ட குறித்த தீர்ப்பிற்கமைய முதலாவது குற்றச்சாட்டிற்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த அபராதத்தைச் செலுத்தத் தவறின் மூன்று மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது குற்றச்சாட்டிற்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் ஆறு மாத கால சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த சிறைத்தண்டனையை ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மூன்றாவது குற்றச்சாட்டிற்கு 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த அபராதத்தைச் செலுத்தத் தவறின் மூன்று மாத கால சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
🛑முதலாம் இணைப்பு
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
கொழும்பில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சொகுசு BMW கார் தொடர்பான வழக்கு குறித்தே அவர் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.
சட்டவிரோதமாக வாகனத்தை வைத்திருந்தமை, வரி ஏய்ப்பு மற்றும் மோட்டார் வாகனச் சட்ட மீறல்கள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது முன்வைக்கப்பட்டிருந்தது.
நீதிமன்றில் முன்னிலை
இந்தநிலையில் கடந்த அக்டோபர் 28 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, தனது சட்டத்தரணிகள் மூலம் தொடர்புடைய குற்றச்சாட்டுகளுக்குத் தாம் குற்றத்தை ஒப்புக்கொள்வதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து தண்டனை விதிப்பது மற்றும் குறித்த வாகனத்தை அரசுடமையாக்குவது தொடர்பான உத்தரவை பிறப்பிப்பதை கொழும்பு கோட்டை பதில் நீதவான் கிங்ஸ்லி ஹெட்டியாராச்சி கடந்த நவம்பர் 11 ஆம் திகதி இன்றைய தினத்திற்கு ஒத்திவைத்திருந்தார்.
இதனடிப்படையில் இன்றையதினம் அவர் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |