3 ஆயிரத்து 518 பேரை கொலை செய்ய உதவிய ஜோசஃப் எஸ்! நடந்தது என்ன?
இரண்டாம் உலகப்போர் முடிவுக்குவந்து 76 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், நாசி வதை முகாம் ஒன்றின் காவலராக பணியாற்றிய ஒருவர், 3 ஆயிரத்து 500 இற்கும் அதிகமானவர்களை கொலை செய்ய உதவினார் என்ற குற்றச்சாட்டில் வழக்கு விசாரணையை எதிர்நோக்கியுள்ளார்.
சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த கைதிகளை சுட்டுக் கொல்லவும், ஏனையோரை சைக்லான் - பி என்ற நச்சுக் காற்றை செலுத்திக் கொல்லவும் ஜோசஃப் எஸ் எனும் அந்த நபர் உடந்தையாக இருந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருகையில், ஜெர்மனியின் தலைநகர் பெர்லின் அருகே உள்ள சாக்சென்ஹாசன் வதை முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 3, ஆயிரத்து 518 பேரை கொலை செய்ய உதவினார் என ஜோசஃப் எஸ் என்ற நபருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
நாசி கால குற்றவாளிகள் நீதி விசாரணையை எதிர்கொள்வதற்கான காலமும் கடந்துவரும் நிலையில், குறித்த குற்றத்துக்காக விசாரணையை எதிர்கொள்ளும் மிகவும் வயதான நபராக ஜோசஃப் எஸ் பதிவாகியுள்ளார்.
அண்மைய ஆண்டுகளிலேயே நாசி ஆட்சியின் கடைநிலையில் இருந்த ஊழியர்களும் நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றனர்.
அந்த வகையில் 10 ஆண்டுகளுக்கு முன்னரே ஜோன் டெம்ஜன்ஜாக் எனும் வதை முகாம் காவலர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்தது.
இரண்டாம் உலகப் போரின்போது நாசிக்கள் செய்த குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கடைநிலையில் இருந்தவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
தனியுரிமைச் சட்டங்கள் காரணமாக தற்போது குற்றம்சாட்டப்பட்ட நபரின் முழுமையான பெயர் வெளியிடப்படவில்லை என்பதுடன், அவர், ஜோசஃப் எஸ் என மாத்திரமே அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
குற்றச்சாட்டப்பட்ட நபர் ஒரு பூட்டு செய்யும் தொழிலாளி என்பதுடன், தமக்கு எதிரான விசாரணை குறித்து ஜோசஃப் எஸ் இதுவரை பொது வெளியில் கருத்துக்கள் எதனையும் வெளியிடவில்லை.
சாக்சென்ஹாசன் வதை முகாமில் குறித்த பிரதிவாதி, 1942 ஆம் ஆண்டில் தனது 21 ஆவது வயதில் காவலராகப் பணியில் இணைந்ததுடன், தற்போது அவர் 101 வயதை கடந்துள்ளார்.