CDM இயந்திரம் இல்லாத இடத்தில் பொய்யாக பெயர்ப்பலகை வைத்த வங்கி !
கிளிநொச்சி பூநகரிப்பகுதியில் CDM இயந்திரம் இல்லாத நிலையில் பொய்யான பெயர்ப்பலகை வைத்த அரச வங்கி ஒன்றின் முறைகேட்டைத் தட்டிக்கேட்ட ஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் கிளிநொச்சி பூநகரிப்பகுதியில் அமைந்துள்ள அரச வங்கி ஒன்றில் நேற்று (21-01-2026) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கிளிநொச்சி பூநகரிப்பகுதியில் உள்ள அரச வங்கி ஒன்றில் ATM இயந்திரம் மாத்திரமே காணப்படுகின்ற போதும், அந்த வங்கியின் முன்பாக ATM மற்றும் CDM இரண்டினது பெயர்ப்பலகையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
பணம் வைப்பு
இந்தநிலையில் குறித்த வங்கியில் பணம் வைப்புச் செய்வதற்காகச் சென்ற ஊடகவியலாளர் ஒருவர், அங்கு CDM இயந்திரம் இல்லாததை அவதானித்து அதனை காணொளியாக பதிவு செய்துள்ளார்.
இதன்போது வீதியின் மறுபுறத்தில் நின்றிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் அங்கு வந்து ஏன் புகைப்படம் எடுக்கிறீர்கள் எனக் கோரியுள்ளார்.

அதற்கு ஊடகவியலாளர், இங்கு CDM இயந்திரம் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி, இப்பெயர்ப்பலகையை அகற்றுமாறு முகாமையாளரிடம் தெரிவிக்குமாறு தெரிவித்து விட்டு புறப்படத் தயாராகியுள்ளார்.
அப்போது அந்தப் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஊடகவியலாளர் வந்த வாகனத்தைத் தனது தொலைபேசியில் புகைப்படம் எடுத்துள்ளார்.
பாதுகாப்பு அதிகாரி
எதற்காகத் தனது வாகனத்தைப் புகைப்படம் எடுத்தீர்கள் என ஊடகவியலாளர் கேட்டதற்குப் பதிலளிக்காமல் அவர் வங்கிக்குள் சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து முகாமையாளரை அழைக்குமாறு ஊடகவியலாளர் கோரிய நிலையில், அங்கு வந்த வங்கியின் அதிகாரி, இதில் தமது பிழை இல்லை எனவும், தமது CDM இயந்திரம் இதிலிருந்து சிறிது தூரத்தில் இருப்பதாகவும், அதற்கான பெயர்ப்பலகையே இங்கே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதற்கு ஊடகவியலாளர், CDM இயந்திரம் உள்ள இடத்திலேயே பெயர்ப்பலகையை வைக்க வேண்டும் என தெரிவித்த போதும் போது, "அந்த இடத்தில் பெயர்ப்பலகை போட அனுமதி நீங்களா தருவது?" எனக் கேட்டதோடு, அப்படித்தான் தாங்கள் போடுவோம் எனவும் அந்த அதிகாரி பொறுப்பற்ற விதமாகப் பதிலளித்துள்ளார்.
அத்தோடு, பாதுகாப்பு அதிகாரி எடுத்த புகைப்படங்களை அழிக்குமாறு கோரிய போது, அது முடியாது எனத் தெரிவித்துவிட்டு கதவை மூடிவிட்டுச் சென்றுள்ளனர்.
பெயர்ப்பலகை
ஒரு அரச வங்கியின் பொறுப்பு வாய்ந்த அதிகாரி தமது பிழைகளை ஏற்றுக்கொள்ளாது, வங்கி பாதுகாப்பு உத்தியோகத்தருடன் இணைந்து ஊடகவியலாளரை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளமையானது கண்டனத்துக்குரிய விடயம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த வங்கியானது உடனடியாக அந்தப் பெயர்ப்பலகையை அகற்றி CDM இயந்திரம் உள்ள இடத்தில் பொருத்த வேண்டும் அல்லது வங்கியில் புதிய CDM இயந்திரத்தைப் பொருத்த வேண்டும் என வலியுருத்தப்பட்டுள்ளது.

பொய்யான பெயர்ப்பலகையை வைத்து மக்களின் நேரத்தை வீணடிக்கக் கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு, வங்கி முகாமையாளர் பெயர்ப்பலகைகளைப் போடுவதற்கான அனுமதியை உரிய தரப்பிடம் பெற வேண்டுமே தவிர, நியாயம் கேட்பவர்களை அனுமதி எடுத்துத் தருமாறு கோர முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு, ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதை விடுத்துத் தங்களது பிழைகளைத் திருத்திக் கொள்ள வேண்டும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |