தமிழினத்திற்குக் குரல் கொடுத்தமையால் ஒரே நாளில் அடக்கப்பட்ட தமிழ், சிங்கள ஊடகவியலாளர்கள்!
இலங்கையில் கருத்துச் சுதந்திரம் இரத்தத்தில் நனைந்த காலங்களை நினைவூட்டும் நாளாக இன்றைய நாள் அமைகிறது.
ஊடகச் சுதந்திரத்தை ஒடுக்கிய அரசியல் வன்முறையின் உச்சத்தை வெளிப்படுத்தும் இரண்டு கொடூர நிகழ்வுகள் இதே நாளில் நிகழ்ந்தன.
தமிழ் ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் படுகொலை செய்யப்பட்டதுடன், சிங்கள ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டார்.
இன, மொழி வேறுபாடுகளைக் கடந்தும், உண்மையை எழுதியதற்காக உயிரும் அடையாளமும் பறிக்கப்பட்ட இந்த இரு சம்பவங்களும் இலங்கையில் நிலவிய கடுமையான ஊடக அடக்குமுறையின் சர்வதேச சாட்சிகளாக உள்ளன.
ஈழவன் எனப்பட்ட்ட சுகிர்தராஜன்
சுப்பிரமணியம் சுகிர்தராஜன் (டிசம்பர் 12, 1969 – ஜனவரி 24, 2006) இலங்கைத் தமிழ் ஊடகவியலாளராக ஈழப் போர்க் காலத்தில் துணிச்சலுடன் செய்தியளித்தவர்.
எஸ்.எஸ்.ஆர் என அறியப்பட்ட அவர், சுடரொளி பத்திரிகையில் பணியாற்றியதுடன், உதயன், வீரகேசரி, மெற்றா நியூஸ் ஆகிய ஊடகங்களிலும் அரசியல் கட்டுரைகளை எழுதி வந்தார்.
திருகோணமலையின் போர்ச் சூழலிலிருந்து நேரடி தகவல்களை பல செய்தி நிறுவனங்களுக்கு வழங்கிய முக்கிய ஊடகவியலாளராக அவர் விளங்கினார்.
வீரகேசரியில் எஸ்.எஸ்.ஆர், மனோ, ரஹ்மான் என்ற பெயர்களிலும், மெற்றா நியூசில் “ஈழவன்” என்ற பெயரிலும் அவர் எழுதிய கட்டுரைகள் அதிகார வன்முறைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தன.
மட்டக்களப்பு குருமண்வெளியில் பிறந்த சுகிர்தராஜன், சிவசக்தி வித்தியாலயம், மட்டக்களப்பு இந்துக் கல்லூரி, மட்டக்களப்பு மத்திய கல்லூரி ஆகிய கல்வி நிலையங்களில் கல்வி கற்றார்.
பாண்டிருப்பு கதிர்ப்பு கலை இலக்கிய வட்டத்தின் தாபகத் தலைவராகச் செயல்பட்ட அவர், 1997ஆம் ஆண்டு இலங்கைத் துறைமுக அதிகார சபையில் எழுத்தாளராகவும் பணியாற்றினார்.
ஐந்து மாணவர்கள் படுகொலை தொடர்பான முக்கிய ஆதாரங்களை நிழற்படங்களாக வெளியிட்டதன் மூலம், அந்தப் படுகொலையின் பிரதான சாட்சியாக அவர் மாறினார்.
தமிழருக்காகக் குரல் கொடுத்த சிங்களவர்
2006 ஜனவரி 24 அன்று, திருகோணமலை ஆளுநர் செயலகத்திற்கு அருகாமையில் வைத்து சுகிர்தராஜன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கொலைக்கு முந்தைய நாளில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்ந்த நடவடிக்கைகள் குறித்த தகவல்களை அவர் சுடரொளியில் வெளியிட்டிருந்தார்.
இந்த படுகொலை தொடர்பில் இதுவரை எந்தவிதமான நியாயமான விசாரணைகளும் நடத்தப்படவில்லை.
திருமணமான சுகிர்தராஜனுக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தனர். உண்மையை வெளிப்படுத்தியதற்கான விலையாக அவர் உயிர் பறிக்கப்பட்டது.
அதே நாளில், தமிழருக்காக குரல் கொடுத்த சிங்கள ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டார்.
பிரகீத் எக்னலிகொட இலங்கையின் முக்கிய ஊடகவியலாளரும், கேலிச்சித்திர ஓவியரும் ஆவார்.
சுதந்திர ஊடக இயக்கத்தைச் சேர்ந்த இவர், Lankaneews.com இணையத்தளத்தில் ஊடகவியலாளராகப் பணியாற்றினார்.
2010ஆம் ஆண்டு ஜனவரி 24 அன்று, ஜனாதிபதித் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், இரவு 8.30 மணியளவில் கொஸ்வத்தையில் இருந்து அவர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.
இலங்கை அரசு சார்ந்த தரப்பினரால் அவர் கடத்தப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
மிக நெடிய போராட்டம்
இரண்டு பிள்ளைகளின் தந்தையான பிரகீத், முன்னதாகவும் ஒருமுறை கடத்தப்பட்டு விசாரணைக்குப் பின் விடுவிக்கப்பட்டவர்.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை மையமாகக் கொண்டு “போர் ஒன்றை வெற்றி கொள்வதற்கான இரகசியங்கள்” என்ற 40 நிமிட ஆவணத் திரைப்படத்தை தயாரித்த குழுவில் அவர் முக்கிய பங்கு வகித்தார். இந்தச் செயற்பாடுகளே அவரது காணாமற்போக்கிற்கான காரணமாகக் கருதப்படுகின்றன.
பிரகீத் எக்னலிகொட காணாமல் போன சம்பவம் குறித்து பன்னாட்டு மன்னிப்பு அவையும், “எல்லைகளற்ற செய்தியாளர்கள்” அமைப்பும் தங்களது கடும் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளன.
கொழும்பு குற்றப்பதிவுத் திணைக்களம் விசாரணைகள் மேற்கொண்டபோதிலும், இன்றுவரை அவர் குறித்த எந்தத் தகவலும் வெளிவரவில்லை. அவரது மனைவி மற்றும் குடும்பத்தின் நீண்ட போராட்டம் இன்னும் நீதிக்கான பதிலை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.
சுகிர்தராஜன் மற்றும் பிரகீத் எக்னலிகொட—இரு ஊடகவியலாளர்களும் வேறு மொழியைச் சேர்ந்தவர்கள். ஆனால் அவர்கள் இருவரையும் இணைத்தது ஒன்று தான்: அதிகாரத்திற்கு எதிராக உண்மையை எழுதும் துணிச்சல். அந்தத் துணிச்சலே அவர்களது உயிரையும் அடையாளத்தையும் பறித்தது.
இன்றைய நாள், இலங்கையில் கருத்துச் சுதந்திரம் எவ்வாறு கொல்லப்பட்டது, ஊடக சுதந்திரம் எவ்வாறு மௌனமாக்கப்பட்டது என்பதை நினைவூட்டும் கருப்பு நாளாக நிற்கிறது. ஆனால் இந்த நினைவுகள், நீதி கிடைக்கும் வரையில், மௌனமாக மாத்திரம் இருந்துவிடக்கூடாது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 24 January, 2026 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.