கல்வி மறுசீரமைப்பை முழுமையாக படியுங்கள்! எதிர்கட்சிகளுக்கு ஹரிணி எடுத்துரைப்பு
கல்வி மறுசீரமைப்பை அரைகுறையாக படித்து விட்டு குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது முறையற்றது என பிரதமர் ஹரிணி அமரசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற பல்கலைக்கழக திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் (23.01.2025) கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
பல்கலைக்கழக கட்டமைப்பு
''பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலம் அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதாகவோ அல்லது ஜனநாயகத்துக்கு எதிரானதாகவோ கொண்டு வரப்படவில்லை.

பல்கலைக்கழக கட்டமைப்பில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் தான் இந்த சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் மற்றும் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டே இச்சட்டமூலம் உருவாக்கப்பட்டது.
சட்டத்தை திருத்தம் செய்வதால் பல்கலைக்கழக கட்டமைப்பு அரசியல்மயமாக்கப்படும் என்று எதிர்க்கட்சியினர் குறிப்பிடுகிறார்கள். ஆனால் எவ்வாறு அரசியல்மயமாக்கப்படும் என்று இவர்கள் குறிப்பிடுவதில்லை.
வெறும் குற்றச்சாட்டுக்களை மாத்திரமே முன்வைக்கிறார்கள். 1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சட்டத்தின் ஒருசில விடயங்கள் தற்போதைய நிலைமைக்கு பொருத்தமற்றதாகவும், முரண்பட்டதாகவும் காணப்படுகிறது. இதனை நடைமுறைக்கு சாத்தியமான வகையில் மாற்றியமைப்பதில் என்ன பிரச்சினை காணப்படுகிறது.
ஆறாம் தர பாடப்புத்தகத்தில் ஒரு தொகுதியில் தவறு நேர்ந்துள்ளது என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. அதனை திருத்திக் கொள்வதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்தோம்.
எதிர்க்கட்சியினரின் வெறுப்பு
பொறுப்பில் இருந்து நாங்கள் விலகவில்லை. இதனை பிடித்துக் கொண்டு எதிர்க்கட்சியினர் வெறுப்பை மாத்திரம் முன்னிலைப்படுத்தி செயற்பட்டார்கள்.
எதையாவது பிடித்துக் கொண்டு அரசாங்கத்தை வீழ்த்தலாமா என்றே பார்க்கிறார்கள். எனக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எப்போது கொண்டு வருகின்றீர்கள்.
நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதற்காகவே இன்று நாடாளுமன்றத்துக்கு வந்தேன். தயாராகவே உள்ளேன். நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்க்கட்சி கொண்டு வர தேவையில்லை.
பிரதமர் பதவியில் மாற்றம் வேண்டும் என்று மக்கள் தீர்மானித்தால் வீடு செல்ல தயாராகவுள்ளேன். நாட்டு மக்களுக்கும், மனசாட்சிக்கும் நான் பொறுப்புக்கூறுகிறேன்.
முதலில் கல்வி மறுசீரமைப்பை முழுமையாக ஆராயுங்கள் பின்னர் வெளிப்படையாக விவாதிக்கலாம்” என கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |