நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக் கோரும் மனு: ஐ.நா.பிரதிநிதியிடம் கையளித்த சிறீதரன்
நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் ஐ.நா.பிரதிநிதியிடம் நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக் கோரும் பரிந்துரைப்பு மனுவொன்று கையளிக்கப்பட்டது.
குறித்த மனுவானது ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆன்ட்ரே பிரான்ச் கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து, நேற்று(04) நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் கையளிக்கப்பட்டது.
இலங்கையில் நீதித்துறை மீது அரச நிர்வாக துறையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வகை நெருக்கீடுகள் காரணமாக, நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு நீதியும் பாதுகாப்பும் கிடைக்க கோரியும், நீதித்துறையினது சுயாதீனத்தை பாதுகாக்க கோரியும் போராட்டம் நடைபெற்றது.
கோரிக்கை மனு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி) கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் , கிளிநொச்சி மாவட்ட சட்டத்தரணிகளின் பங்கேற்போடு கடந்த திங்கட்கிழமை கிளிநொச்சி நகரில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றிருந்தது.
அதன்போது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்ரனியோ குட்ரெஸுக்கு அனுப்பி வைப்பதற்கு ஏதுவாக, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் கோரிக்கை மனு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .