தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு நீதியமைச்சர் அனுப்பிய அவசர கடிதம்
சிறிலங்காவின் எதிர்வரும் அதிபர் தேர்தலுக்காக (Presidential election) 2023 ஆம் ஆண்டு 03 ஆம் இலக்க தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் அதிகாரங்களைப் பிரயோகிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு (Election Commission) எழுத்து மூல அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe) இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலின் போது சட்டவிரோதமான செயல்கள், இலஞ்சம், கப்பம் பெறுதல் போன்ற சம்பவங்களுக்கு தற்போதைய விகிதாசார தேர்தல் முறையின் கீழ் சட்டம் செயலிழந்துள்ளதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிபர் தேர்தல்
அதன்படி, தேர்தல் கலாசாரத்தை மாற்றி சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட்ட ஜனநாயகத்துக்காக, தேர்தல் ஆணைக்குழுவின் பூரண ஆதரவுடன் 2023 ஆம் ஆண்டு 03 ஆம் இலக்க தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதன் காரணமாக எதிர்வரும் தேர்தலுக்கு அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுப்பதாக விஜயதாச ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் அதிபர் தேர்தலை தடுப்பதற்கு அரசாங்கம் எவ்வாறான தந்திரங்களை கையாண்ட போதிலும் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு
எவ்வாறாயினும் எதிர்வரும் அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியால் வெற்றிபெற முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார (Palitha Range Bandara) குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு சிறந்த தீர்வை வழங்குபவரே எதிர்வரும் அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக களமிறங்குவார் என நாடாளுமன்ற உறுப்பினர் ஷசீந்திர ராஜபக்ச (Shasheendra Rajapaksa) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |