மாணவர்களின் கல்வி தொடர்பில் பெற்றோர்களிடம் ஜே.வி.பி விடுத்துள்ள கோரிக்கை
ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கத்தினதும், விவசாயிகளினதும் போராட்டமும் அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளும் நியாயமானது.
மக்கள் விடுதலை முன்னணி பின்னணியில் இருந்து செயற்படவில்லை. முன்னணியில் இருந்து செயற்படுகிறோம். நியாயமான போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை வழங்குவோம்.
இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
ஆசிரியர் - அதிபர் சேவையில் நிலவும் பிரச்சினைகளை தேர்தல் காலத்தில் அரசியலாக்கி மக்கள் விடுதலை முன்னணி இலாபமடையவில்லை.
அரசாங்கத்தினால் ஏமாற்றப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயற்படுகிறோம்.
மாணவர்களின் மீது அக்கறை கொண்டுள்ளதை போன்று ஆசிரியர்களுக்கு எதிராக கருத்துரைக்கும் ஆளும் தரப்பின் உறுப்பினர்களின் பிள்ளைகள் அரச பாடசாலைகளிலா தற்போது கல்வி கற்கிறார்கள் என்பது குறித்து பெற்றோர் முதலில் ஆராய வேண்டும்.
அரச சேவையில் ஆசிரியர் - அதிபர் சேவைக்கு தான் குறைந்தளவு மாத சம்பளம் வழங்கப்படுகிறது.
ஆசிரியர்களுக்கு எதிராக செயற்படுவதை பெற்றோர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.