ஜே.வி.பி புதிய பாதையில் நகர வேண்டும் - அநுர தரப்புக்கு ஆலோசனை
ஜே.வி.பிக்கு தாமதமாக ஏற்பட்ட ஞானம்
நாட்டின் இன்றைய சூழலில் நாட்டை பொறுப்பெடுக்கத் தயார் என ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க சொல்லியிருப்பது மிகவும் தாமதமாக ஏற்பட்ட ஞானமாகும்.
இந்த அறிவு எப்போதோ ஏற்பட்டிருந்தால் நாட்டின் அதிபராகவும் பிரதமராகவும் ஜே.வி.பி வந்திருக்கும் என உலமா கட்சித் தலைவர் முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் இதனை சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“சந்திரிக்கா அதிபராக இருந்த போது ஜேவிபியினர் அவரது கட்சியுடன் இணைந்து வரலாற்றில் முதல் தடவையாக 30க்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றனர். சிலர் அமைச்சர்களாகவும் இருந்தனர். அதன் பின் அவருடன் முரண்பட்டு ஆட்சியில் இருந்து விலகினர்.
கனவு கண்டு கிடைத்த தோல்வி

கூட்டுச் சேராமல் தனித்து இயங்குவதன் மூலம் தனிக்கட்சியாக ஆட்சியை பிடிக்க முடியும் என கனவு கண்டு கடைசியில் இப்போது மூன்று எம்.பிக்களுடன் உள்ளனர்.
ஒரேயொரு உறுப்பினரான ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருப்பது ஜனநாயகமா எனக் கேட்டவர்கள் மூன்று உறுப்பினரை மட்டும் கொண்ட ஜே.வி.பியிடம் நாட்டை கொடுப்பது ஜனநாயகமா எனக் கேட்டால் அதற்கு பதில் என்ன?
புதிய பாதைக்கு ஜே.வி.பி வரவேண்டும்

ஜே.வி.பியினரின் அரசியல் என்பது நெளிவு சுளிவு அற்ற இறுகிய போக்காகும். இதற்கு காரணம் அக்கட்சியின் அரசியல் யாப்பாகும்.
அவர்கள் நாட்டை நேசிப்பவர்களாக இருந்தால் தமது இறுக்கமான அரசியலில் இருந்து இறங்கி, அனைவரையும் அரவணைத்து, சிறுபான்மை மக்களின் உரிமைகளை ஏற்றுச் செல்லும் புதிய பாதைக்கு ஜே.வி.பி வரவேண்டும்” என அவர் கேட்டுள்ளார்.