கோட்டாபயவின் சர்வகட்சி மாநாட்டை புறக்கணிக்கிறோம்! ஜேவிபி பகிரங்க அறிவிப்பு
அரச தலைவரினால் கூட்டப்பட்ட சர்வகட்சி மாநாட்டில் மக்கள் விடுதலை முன்னணி பங்கேற்காது என்று ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
இரண்டு முக்கிய அமைச்சர்கள் நீக்கப்பட்டதையடுத்து அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள அரசியல் முரண்பாடுகளை தொடர்ந்து அரச தலைவருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் விளைவே சர்வ கட்சி மாநாடு கூட்டப்படுவதற்கு காரணம் என அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இந்த நிலையில் சர்வ கட்சி மாநாட்டை கூட்டுவது தவறான ஓர் விடயம் எனவும் திஸாநாயக்க குறிப்பிட்டிருந்தார்.
கொவிட் தொற்றுநோய்களின் போது இதேபோன்ற சர்வகட்சி மாநாடு அரச தலைவரால் கூட்டப்பட்டது, இருப்பினும் அரசாங்கம் கட்சித் தலைவர்களின் முன்மொழிவுகளுக்கு செவிசாய்க்கவில்லை.
இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம்(IMF) வெளியிட்டுள்ள அறிக்கையை அரசாங்கம் இன்னும் நாடாளுமன்றத்தில் முன்வைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி மோசமடைந்ததையடுத்து அரசாங்கம் சர்வ கட்சி மாநாட்டை கூட்டியுள்ளதாகத் தெரிவித்த ஜே.வி.பி.யின் தலைவர், நெருக்கடி நிலைமைக்கு ஒன்றிணைந்த பிரேரணையை ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் கோரியிருந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான விடயங்களை கருத்திற் கொண்டு மாநாட்டை புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
