திருமலையில் வீட்டுச்சின்னத்தில் களமிறங்கும் குகதாசன் தலைமையிலான அணி
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் (K. S. Kugathasan) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
திருகோணமலை (Trincomalee) மாவட்ட செயலகத்தில் இன்று (11) வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் நால்வரும் ஏனைய கட்சிகளில் இருந்து மூவரும் திருகோணமலை மாவட்டத்தில் இம்முறை வீட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ளனர்.
வீட்டு சின்னத்தில் போட்டி
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ச.குகதாசன் தலைமையிலான குழுவினர், “திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்கள் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும். வடக்கு கிழக்கில் இம் மாவட்டத்தில் மாத்திரம் இணைந்து கூட்டணியாக வீட்டு சின்னத்தில் போட்டியிடுகிறோம்.
எதிர்காலத்தில் மக்களின் உரிமைகளோடு இணைந்த அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கவுள்ளோம். ஓரணியாக இணைந்தால் தான் இரண்டு ஆசனங்களையாவது பெற முடியும்.
30 வருட கால யுத்தம்
கடந்த தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் போனது. எனவே தான் தமிழ் மக்களின் இருப்பை பாதுகாக்க கூட்டணியாக இணைந்துள்ளோம்.
கடந்த 30 வருட கால யுத்தம் காரணமாக பாதிப்படைந்த தமிழ் சமூகம் இவ்வாறான விடயங்களில் தமிழ் தேசியத்தை பாதுகாக்க ஒற்றுமையாக செயற்படுவது சாலச் சிறந்தது“ என தெரிவித்தனர்.
கட்டுப்பணம் செலுத்துதல்
இதேவேளை நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாளான இன்று (11.10.2024) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் செயலகத்தில் தமது நியமனப் பத்திரங்களை தாக்கல் செய்வதற்காக பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் வருகை தந்தனர்.
திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் பொதுஜன பெரமுன ஆகியவை இன்றையதினம் தமது கட்டுப்பணத்தினை செலுத்தியிருந்தன.
நேற்றைய தினம் (10) பதிவு செய்யப்பட்ட 7 கட்சிகளும் 9 சுயேட்சைக் குழுக்களும் தமது கட்டுப்பணத்தினை செலுத்தியிருந்த நிலையில் இன்றையதினமும் பல கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் தமது கட்டுப்பணத்தினை செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |