கடுகன்னாவ மண்சரிவில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு
புதிய இணைப்பு
கடுகன்னாவவில் இடம்பெற்ற மண்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.
மேலும், இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிய மற்றொரு பெண் உட்பட இரண்டு பேரின் உடல்களை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர்.
மூன்றாம் இணைப்பு
கீழ் கடுகன்னாவவில் பல கடைகள் மீது ஒரு பெரிய பாறை மற்றும் மண் மேடு சரிந்து விழுந்ததில் சிக்கிய பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.
இது ஆறு மணி நேர போராட்டத்திற்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இந்நிலையில் அவரை மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
கீழ் கடுகன்னாவவில் பல கடைகள் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும், தெரிவிக்கப்படுகிறது.
மேலும். ஐந்து பேர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களைத் தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
முதலாம் இணைப்பு
கண்டி - கொழும்பு பிரதான வீதியின் கடுகன்னாவ பகுதியில் ஒரு வீடு மற்றும் பல கடைகள் பாறைகள் சரிந்து விழுந்துள்ளது.
இந்த சம்பவத்தில் இடிந்து விழுந்த வீட்டின் கீழும், இடிபாடுகளுக்கு அடியிலும் பலர் புதைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
பஹல கடுகன்னாவ பகுதியிலேயே குறித்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. அவ்வீதி ஊடான போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, கனேதென்ன பிரதேசத்தில் மலையிலிருந்து பாறைகள் வீழ்ந்துள்ளதால், பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது நிலவும் ஆபத்தான சூழலைக் கருத்தில் கொண்டு, இவ்வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், இயன்றவரை மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
