இந்தியாவுக்காக விளையாடவே தேவையில்லை, மளிகை கடை திறவுங்கள் - கபில்தேவ்
இந்திய அணியின் முன்னணி வீரர்களை கபில்தேவ் கடுமையாக விமர்சனம் செய்த சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய துடுப்பாட்ட அணி வீரர்கள் பலரும் தங்களுக்கு அழுத்தம் ஏற்படுவதாக கூறி சில தொடர்களில் பங்கேற்காமல் ஓய்வெடுத்துக் கொள்கிறார்கள்.
தற்போது துடுப்பாட்ட போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் வீரர்களுக்கு பி.சி.சி.ஐ ஓய்வு வழங்கி வருகிறது.
இந்த நிலையில் கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கபில் தேவின் உரை சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது.
இந்தியாவுக்காக விளையாடவே தேவையில்லை
மேலும்,முன்னணி வீரர்களை கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்துள்ளார்.
குறித்த உரையில், “நான் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன். நாங்கள் ஐ.பி.எல் லில் விளையாடுகிறோம் எங்களுக்கு அழுத்தம் நிறைய இருக்கிறது என்ற வார்த்தை தற்போது உள்ள வீரர்கள் இடையே மிகவும் சர்வசாதாரணமாக மாறிவிட்டது.
நான் அவர்களிடம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அப்போது எதற்கு இந்தியாவுக்காக விளையாடுகிறீர்கள். வாய்ப்பு கிடைக்கிறது உங்களை யார் விளையாட சொல்கிறார்கள்.
இவ்வளவு அழுத்தத்துடன் நீங்கள் விளையாடினால் உங்களை சிலர் ரசிப்பார்கள், பலர் உங்களை திட்டுவார்கள். இந்த திட்டுவதற்கெல்லாம் நீங்கள் பயந்தால் நீங்கள் இந்தியாவுக்காக விளையாடவே தேவையில்லை.
இதை பெருமை என்று சொல்லுங்கள்
நீங்கள் உங்கள் நாட்டுக்காக விளையாடும்போது உங்களுக்கு எப்படி நெருக்கடி ஏற்படும். அது எப்படி சாத்தியமாகும்? 100 கோடி மக்கள் இருந்து வெறும் 20 பேர் தான் நாட்டுக்காக விளையாட வாய்ப்பு கிடைக்கிறது.
இதை பெருமை என்று சொல்லுங்கள் இதனை நீங்கள் எப்படி நெருக்கடி ,அழுத்தம் என்று சொல்வீர்கள் என்று எனக்கு புரியவில்லை. நிச்சயம் இது பெருமையான ஒன்று .
நீங்கள் மக்களிடமிருந்து அவ்வளவு அன்பை பெறுகிறீர்கள். இனி அழுத்தம் என்ற வார்த்தையை விட்டுவிட்டு பெருமை கொள்கிறேன் என்ற வார்த்தையை பயன்படுத்துங்கள். அழுத்தம் என்பது அமெரிக்க மக்கள் பயன்படுத்தும் வார்த்தை.
மளிகை கடை திறவுங்கள்
உங்களால் விளையாட முடியவில்லை என்றால், பயிற்சி செய்ய முடியவில்லை என்றால் செய்யாதீர்கள். உங்களை யார் நீ செய்து ஆக வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பது.
எங்கேயாவது சென்று மளிகை கடை திறவுங்கள். அங்கு வாழைப்பழம் முட்டைகளை விற்று பிழைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு நாட்டுக்காக விளையாட வாய்ப்பு கிடைக்கிறது.
நீங்கள் எப்படி அழுத்தம் என்று சொல்லலாம்.இதை நீங்கள் மகிழ்ச்சியாக எடுத்துக்கொண்டு விளையாட வேண்டும் . நீங்கள் எப்போது உங்களுடைய வேலையை மகிழ்ச்சியாக எடுத்துக் கொண்டு செய்கிறீர்களோ, அப்போது அந்த வேலை சுலபமாகும்.
நீங்கள் அந்த வேலையை அழுத்தம் என்று சொல்வீர்கள் என்றால் அதில் இருந்து உங்களுக்கு எந்த பயனும் கிடைக்காது.” என்று கபில்தேவ் விமர்சித்துள்ளார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்
