பலியான மக்கள்: நீண்ட மெளனத்தில் விஜய் - தோல்வியடைகிறதா தவெக தலைமை
புதிய இணைப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) அணுகுமுறையில் தோல்வி ஏற்பட்டுள்ளதாக மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், துயர சம்பவத்துக்குப் பிறகு ஒரு கட்சி எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது என்பது முக்கியம்.
நிர்வாகிகளிடம் பதிலும் இல்லை
ஆளும்கட்சி என்பதால் களத்துக்கு தி.மு.க வந்துவிட்டது. பா.ஜ.க, அ.ம.மு.க, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளும் சம்பவ இடத்துக்கு வந்துவிட்டன.

சசிகலாவும் கூட பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.
ஆனால், மக்களை சந்திப்பது தொடர்பாக தவெக தலைமை மற்றும் நிர்வாகிகளிடம் எந்தப் பதிலும் இல்லை என ஷ்யாம் குறிப்பிட்டுள்ளார்.
கட்சிக்கு கட்டமைப்பு இல்லை
அத்துடன் மருத்துவமனைக்கு கட்சித் தலைவர் வராவிட்டாலும் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்த்திருக்க வேண்டும்.

அவர்கள் சென்று பார்க்காததன் மூலம் கட்சிக்கு கட்டமைப்பு இல்லை என்பது தெளிவாகிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்சியின் கட்டமைப்பு சரியாக இல்லாவிட்டால் தேர்தலின்போது வாக்குகளைப் பெறுவதில் சிக்கல் இருக்கும். இது தோல்வியில் முடியும்.
நேரில் ஆறுதல் கூறுவதற்குச் சென்றால் தங்களுக்கு ஏதேனும் நேரும் என்ற அச்சம் இருந்தால் அரசியலுக்கு வரவே கூடாது எனவும் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசாரத்தில் இடம்பெற்ற விபரீதத்தின் பின்னர் விஜய் முதல் முறையாக தனது வீட்டில் இருந்து காரில் புறப்பட்டு வெளியே சென்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கரூரில் இருந்து நேற்று முன்தினம் (27) அவசர அவசரமாக சென்னைக்குச் சென்ற விஜய், இரவு 11 மணிக்கு நீலாங்கரை வீட்டிற்குச் சென்றபின் வெளியேறவில்லை தற்போது தான் வெளியேறியுள்ளார்.
தமிழகத்தின் கரூர் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் தற்போது அவர் எங்கு செல்கிறார் என்ற உத்தியோகபூர்வ தகவல்கள் கிடைக்கவில்லை.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |