கச்சத்தீவு குறித்த ஸ்டாலினின் அறிவிப்பு! இலங்கை அரசு பதிலடி
கச்சத்தீவு என்பது இலங்கையில் வாழும் மக்களுக்கு சொந்தமானது எனவும் இந்திய, தமிழ்நாட்டுக்கு சொந்தமானது அல்ல எனவும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று (04.10.2025) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவை பாதுகாப்பதற்கு இயன்ற அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இராஜதந்திர அணுகல்
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “கச்சத்தீவு தொடர்பாக தமிழ்நாட்டு செய்திகள் பல்வேறு வதந்திகளை பரப்பி வருகின்றன. தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு தேவை இருக்குமாக இருந்தால் நீங்கள் தேர்தலுக்காக எங்களுடைய பெயரை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மீண்டும் மீண்டும் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதற்காக “கச்சத்தீவை மீட்கின்றோம். கச்சத்தீவு எங்களுக்கு சொந்தமானது. கச்சத்தீவை மீட்பது தான் ஒரே வழி” என்று கூறுவதை நிறுத்துங்கள்.
தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலினும் இவ்விடயத்தை கூறியிருந்தார். கச்சத்தீவை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அதற்கான இராஜதந்திர ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என நான் அவரிடம் கூற விரும்புகிறேன்.
சர்வதேச ரீதியான சட்டங்களை திரும்பிப் பாருங்கள். மத்திய அரசாங்கமே இதில் கைச்சாத்திட்டது.
கச்சத்தீவை வைத்து பிழைப்பு நடத்துபவர்களாக தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் மாறிவிட்டனர். ஆகவே, நான் அவர்களுக்கு இறுதியாக ஒன்றே ஒன்றை மாத்திரம் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
கச்சத்தீவு என்பது இலங்கையில் உள்ள இரண்டு கோடியே இருபது இலட்சம் மக்களுக்கு சொந்தமானது. இந்திய, தமிழ்நாட்டுக்கு சொந்தமானது அல்ல” என தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவை மீட்பதுதான் ஒரே வழி
இதேவேளை, நேற்று முன்தினம் (03.10.2025) தமிழ்நாடு, இராமநாதபுரத்தில் நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்பது தான் இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு ஒரே வழி என வலியுறுத்தியிருந்தார்.
அவருடைய இந்த கருத்துக்கு பதிலளிக்கும் விதமாகவே, இலங்கை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என உறுதியாக தெரிவித்துள்ளார்.
வடக்கு மீனவ சமூகம்
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆகியோர் கச்சதீவை அரசியலுக்காக பயன்படுத்தினால் இருவருக்கும் எதிராக கடற்றொழில் சமுகம் ஒரு பாரிய போராட்டத்தை முன்னெடுக்கும் என வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடாக பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா நேற்று (04.10.2025) எச்சரிக்கை விடுத்திருந்தார்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கச்சதீவை மீட்பேன் என வடக்கு கடற்றொழில் சமூகத்திற்கு எதிரான ஒரு கருத்தை தொடர்ச்சியாக அரசியல் மேடைகளில் பேசி வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
