மட்டக்களப்பில் அதிபரால் கொடூரமாக தாக்கப்பட்ட மாணவர்: காவல்துறையின் அசமந்தம்
மட்டக்களப்பில் (Batticaloa) பாடசாலை மாணவர் ஒருவர் அதிபரினால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.
காத்தான்குடி, மட்/மம/ ஜாமியுழ்ழாபிரீன் வித்தியாலயத்தில் ஐந்தாம் தரத்தில் கல்வி கற்றுவரும் மாணவர் ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
குறித்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (03) இடம்பெற்றுள்ளது.
கொடூரமாக தாக்குதல்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தாக்குதலுக்கு உள்ளான மாணவருக்கும் மற்றும் அதே வகுப்பில் கல்வி கற்று வரும் மற்றுமொரு மாணவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, மோதலில் ஈடுபட்ட இரு மாணவர்களும் அதிபரிடம் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
தாக்குதலில் ஈடுபட்டவரில் ஒரு மாணவர் ஆசியர் ஒருவரின் மகன் என தெரிவிக்கப்படுகின்றது.
பலத்த காயம்
இந்தநிலையில் தன்னை அடித்துவிட்டதாக ஆசிரியரின் மகன், மற்றைய மாணவர் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதன்பின்பு, முழு விவரத்தையும் கேட்டு அறியாமல் உடனே அதிபர் மற்றைய மாணவரை கொடூரமாக தாக்கியுள்ளார்.
மாணவரின் பின் தலையில் பொல்லு போன்ற ஒன்றினால் மிகவும் பலமாக தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் கை மற்றும் கால்களிலும் தாக்கப்பட்டுள்ள நிலையில் மாணவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
காவல்துறையில் முறைப்பாடு
இருப்பினும் இதனை உடனடியாக வீட்டில் தெரிவிக்காத மாணவர், தன்னால் வலி தாங்க முடியாத நிலையில் பெற்றோரிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளார்.
அத்துடன் தாக்குதலுக்கு உள்ளான அன்று இரவு மாணவருக்கு மிகவும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, வைத்தியசாலையில் மாணவரை அனுமதித்த பெற்றோர் சம்பவம் தொடர்பில் காவல்துறையில் முறைப்பாடு அளித்துள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற அன்றே காவல்துறையில் முறைப்பாட்டை முன்வைத்தும் தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் குற்றச்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
