நாடாளுமன்றுக்கு வர மறுப்பு தெரிவித்த கெஹலிய
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று (07) நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க மறுத்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு அனுமதி வழங்கப்பட்ட போதிலும், அவர் மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரமற்ற மருந்து இறக்குமதி தொடர்பான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கெஹலிய ரம்புக்வெல்லவை நாடாளுமன்றத்தின் புதிய அமர்வை ஆரம்பிக்கும் நிகழ்வில் பங்கேற்க அனுமதிக்குமாறு சபாநாயகர் சிறைச்சாலை திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
மறுப்பு தெரிவித்த கெஹலிய
இந்நிலையில் அனுமதி வழங்கப்பட்ட போதும் அவர் பங்கேற்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் தரமற்ற தடுப்பு மருந்துகளை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில்,கெஹலிய ரம்புக்வெல்ல சுற்றாடல் அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக நேற்றைய தினம் (6)கடிதமொன்றின் மூலம் அதிபர் ரணில் விக்ரமசிங்கிற்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.