பிரித்தானிய பிரதமரின் பதவி விலகல் விவகாரம்! தொடரும் அரசியல் போராட்டம்
பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் தனது பதவியைத் தக்கவைத்துக்கொள்ளப் பெரும் போராட்டத்தை எதிர்கொண்டு வரும் நிலையில் அவர் தற்போதைய அரசியல் யதார்த்தங்களைத் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக அந்நாட்டு வர்த்தகத் துறை அமைச்சர் பீட்டர் கைல் தெரிவித்துள்ளார்.
ஆளும் தொழிற்கட்சியைச் சேர்ந்த ஸ்டார்மரின் செல்வாக்கு சமீபகாலமாகப் பெரும் சரிவைச் சந்தித்துள்ள சூழலில் அவரது அரசியல் எதிரியான ஆண்டி பர்ன்ஹாம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்குத் தேர்வாகியுள்ளார்.
இது பிரதமர் பதவிக்கு பர்ன்ஹாம் அதிகாரப்பூர்வமாகச் சவால் விடுப்பதற்கான வழியை ஏற்படுத்தியுள்ளதால் ஸ்டார்மரின் பிரதமர் பதவிக்கு மிகக் கடுமையான அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.
இறுதி முடிவு
திங்கட்கிழமை (22) அதிகாலையிலேயே கீர் ஸ்டார்மர் தனது பதவி விலகலை அறிவிக்கக்கூடும் என்று பிரித்தானியாவின் தி அப்சர்வர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அவர் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் மனைவியுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கட்சியின் மூத்த தலைவர்கள் அவரது இறுதி முடிவை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் டவுனிங் ஸ்ட்ரீட் (பிரதமர் அலுவலகம்) தரப்பு ஸ்டார்மர் தொடர்ந்து அரசுப் பணிகளில் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்து இந்த ஊகங்களை மறுத்துள்ளது.
பத்து ஆண்டுகள்
இருப்பினும் தொழிற்கட்சியின் 100 இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர் பதவி விலக வேண்டும் என்று பகிரங்கமாகக் கோரிக்கை விடுத்து வருவதால் அவர் மீதான அழுத்தம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
மான்செஸ்டர் நகர மேயராக இருந்த ஆண்டி பர்ன்ஹாம், மேக்கர்ஃபீல்ட் தொகுதி இடைத்தேர்தலில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்குள் நுழைந்துள்ளார்.

மக்கள் மத்தியில் வடக்கின் ராஜா என்று அழைக்கப்படும் பர்ன்ஹாமுக்குத் தொழிற்கட்சி எம்.பி.க்களிடையே பெரும் ஆதரவு பெருகிவருகின்றது.
ஸ்டார்மர் பதவி விலகும் பட்சத்தில் தொழிற்கட்சிக்குள் புதிய தலைமைப் போட்டி அல்லது ஒருமனதான தேர்வு மூலம் ஆண்டி பர்ன்ஹாம் பிரித்தானியாவின் அடுத்த பிரதமராகப் பொறுப்பேற்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
அவ்வாறு நடந்தால் கடந்த பத்து ஆண்டுகளில் பிரித்தானியா காணும் ஏழாவது பிரதமர் இவராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |