மரண பயம் முதல் மீண்டு வந்த பயணம் வரை : ஆவணப்படத்தில் மனம் திறந்த இளவரசி கேட்
வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் தான் புற்றுநோயை எதிர்கொண்டபோது அனுபவித்த அச்சம், மனக்கவலை மற்றும் வாழ்க்கை குறித்த நிச்சயமற்ற தன்மை தொடர்பில் மனம் திறந்து கருத்து வெளியிட்டுள்ளார்.
தனது புற்றுநோய் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள 'Heal' என்ற புதிய ஆவணப்படத்தின் ஊடாகவே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
புற்றுநோய் என்பது உடல் ரீதியாக மட்டுமன்றி, உளவியல் ரீதியாகவும் ஒருவரிடம் ஆழமான மாற்றங்களை ஏற்படுத்துவதாக கேட் இளவரசி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆழமான மாற்றம்
இது தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில், "புற்றுநோய் உங்களை மாற்றுகிறது. அது உங்கள் உடலை மாற்றுகிறது. நீங்கள் சிகிச்சைகளையும் அறுவைச் சிகிச்சைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால், புற்றுநோய் இருப்பதை அறிந்துகொள்வது உங்களுக்குள் அதைவிட ஆழமான மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

மரணத்தை எதிர்கொள்ள வேண்டிய சாத்தியக்கூறுகள் குறித்து சிந்திக்கும்போது, வாழ்க்கை நிரந்தரமானது அல்ல என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய பகுதிகளில் உள்ள உயரமான மூன்று மலைச் சிகரங்களையும் ஒரே நாளில் ஏறும் சவாலில் கேட் இளவரசி பங்கேற்ற காட்சிகளும் இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளன.
அத்துடன், ஜோர்ஜ், லூயிஸ் மற்றும் சார்லட் ஆகிய தனது மூன்று பிள்ளைகளும் அவர் மீது அன்பை வெளிப்படுத்தி அனுப்பிய குரல் பதிவுகளும், இளவரசர் வில்லியம் மற்றும் பிள்ளைகளுடன் அவர் செலவிட்ட நெகிழ்ச்சியான தருணங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
ஆவணப்படத்தின் நோக்கம்
மேலும், மருத்துவமனைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வரும் புற்றுநோயாளிகளைச் சந்தித்து, அவர்களின் அனுபவங்கள், எதிர்பார்ப்புகள் மற்றும் அச்சங்கள் குறித்து கேட் இளவரசி கலந்துரையாடும் காட்சிகளும் ஆவணப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

தன்னைப் போன்ற சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மக்களுக்கு ஆதரவளிப்பதுடன், நோயாளிகளுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்களின் சேவையைப் பாராட்டுவதுமே இந்த ஆவணப்படத்தின் நோக்கம் என கேட் இளவரசி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இந்த ஆவணப்படத்தின் மூலம் கிடைக்கும் வருமானம், அவர் சிகிச்சை பெற்ற ரோயல் மார்ஸ்டன் மருத்துவமனைக்கு ஆதரவளிக்கும் புற்றுநோய் தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |