யாழில் பரபரப்பை ஏற்படுத்திய கடத்தல் சம்பவம்
யாழ்ப்பாணத்திலிருந்து பளை நோக்கி சென்று கொண்டிருந்த கப் வாகனத்தை வழிமறித்து வாகனத்தை கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து பளை வைத்தியசாலைக்கு பயணித்துக்கொண்டிருந்த கப் வாகனத்தை, பெரிய பளை சந்திக்கு அருகில் மூவர் வீதியை மறித்து, வாகனத்தில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு வாகனத்தை கடத்திச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் ஆனையிறவுச் சந்தியில் கடமையாற்றிய காவல்துறையினருக்கு உத்தியோகத்தர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, வாகனத்தை கடத்திய கொள்ளையர்களை தடுத்து நிறுத்த காவல்துறையினர் முயன்றுள்ளனர்.
எனினும், சந்தேகநபர்கள் காவல்துறையினரின் உத்தரவை மீறி வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் காவல்துறை உத்தியோகத்தர்கள் வாகனங்களை துரத்திச் சென்று வாகனத்தை கைப்பற்றியதுடன், 3 சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் 24, 30 மற்றும் 34 வயதுடையவர்கள் என்பதுடன் மாங்குளம், பூவரசங்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பில் பளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.