கிளிநொச்சியில் காவல்துறை மீது வாள் வெட்டுத் தாக்குதல்!
கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லாறு பகுதியில் காவல்துறை மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் இருந்த இரண்டு வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு கல்லாறு பகுதியில் வன்முறைச் சம்பவம் இடம்பெறுவதாக அவசர சேவை இலக்கமான 119 இற்கு பிரதேச மக்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த பிரதேசத்திற்கு விசாரணைக்காக சென்ற விசேட காவல்துறையினர் மீதே வாள் வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடமிருந்து வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் 4 காவல்துறையினர் காயமடைந்துள்ளதுடன் இருவர் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதில் ஒருவர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும். மேலும் ஒருவர் சாதாரண காயங்களுடன் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.