வட்டக்கச்சியில் கிளர்ந்தெழுந்த மக்கள்
கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தில் உயிரிழந்த இளம் குடும்பஸ்தரின் கொலைக்கு நீதி வேண்டியும் கடந்த திங்கட்கிழமை கொல்லப்பட்டவரின் குடும்பத்தினர் மீது தருமபுரம் பொலிசார் மேற்கொண்ட தாக்குதலை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சியில் வட்டக்கச்சி பகுதியில் கடந்த10ஆம் திகதி இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தில் உயிரிழந்த அருளம்பலம் துஷ்யந்தனின் கொலைக்கு நீதி வேண்டியும் அதன் தொடர்சியாக கடந்த திங்கட்கிழமை காலை இறந்தவரின்மனைவி மற்றும் சகோதரிகள் மீது தருமபுரம் பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலை கண்டித்தும் இவ்வார்ப்பாட்டம் இன்று 17.03.2021காலை 9 .00மணிக்கு வட்டக்கச்சி சந்தியிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் உழவு இயந்திரங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிராம மக்கள் ஒன்று சேர்ந்து இறந்தவருக்கு நீதி கிடைக்கவில்லையென்றும் பொலிஸார் போதுமான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவித்து இவ்வார்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
இதேவேளை பொலிஸாரின் தாக்குதலுக்குள்ளானவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இன்று வட்டக்கச்சி பிரதேசத்தில் முழு கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறிப்பாக பொதுச்சந்தை மற்றும் வர்த்தக நிலையங்களை முழுமையாக மூடி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

