சிறிலங்கா இராணுவச் சிப்பாய் கழுத்தறுத்து படுகொலை
சிறிலங்கா இராணுவ சிப்பாய் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டதுடன் இந்த கொலையை செய்தவர் என சந்தேகிக்கப்படும் சந்தேக நபரான குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பதவிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட போகஹவெவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பூஓயா பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றிய 39 வயதுடைய திருமணமாகாத சஞ்சீவ சுதேஷ் கருணாரத்ன என்ற இராணுவ சிப்பாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவராவார்.
கொலைக்கான காரணம்

இக்கொலை தொடர்பில் உயிரிழந்தவரின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் மற்றும் அப்பகுதியில் உள்ள கட்டட பொருட்கள் கடையில் (வன்பொருள்) பணியாற்றிய 42 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த இராணுவச் சிப்பாய், கொலையைச் செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபரின் மனைவியுடன் சில காலமாகத் தொடர்பு வைத்திருந்ததுடன், சந்தேகநபருக்கும் அது தொடர்பில் தெரியும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இராணுவ சிப்பாய் உயிரிழப்பு

கடந்த 29ஆம் திகதி ஒரு கும்பலுடன் மது அருந்திவிட்டு ஓட்டோவை ஓட்டிச் சென்ற போதே கோனே ஏரியின் டி சந்தி பகுதியில் இராணுவ சிப்பாய் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இறந்தவர் அன்றைய தினம் மது அருந்திவிட்டு சந்தேக நபரின் வீட்டிற்கு வந்து சந்தேக நபரின் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் கழுத்தில் இருந்து மார்பு வரை வெட்டுக்காயங்களை ஏற்படுத்தி இறந்தவரை வீதியில் இருந்து சுமார் இருபது மீற்றர் காட்டுப்பகுதிக்கு இழுத்துச் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவிருந்தார்.
பதவிய காவல்துறை பொறுப்பதிகாரி பிரதம காவல்துறை பரிசோதகர் விஜய குமாரசிறியின் பணிப்புரையின் பேரில் குற்றப் பிரிவின் அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.