கண்டி - கினிகத்தேனை வீதியில் பாரிய விபத்து! சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி (படங்கள்)
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பழுது பார்க்கும் பேருந்து ஒன்றும் கனரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கினிகத்தேனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சவம்பவம் இன்று காலை கண்டி - கினிகத்தேனை பிரதான வீதியின் பகதொழுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நாவலப்பிட்டி பகுதியிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கிச் சென்ற கனரக வாகனம் ஒன்றும் ஹட்டன் பகுதியில் இருந்து நாவலப்பிட்டி பகுதிக்குச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பழுது பார்க்கும் பஸ் ஒன்றுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் கனரக வாகனத்தின் சாரதி உயிரிழந்துள்ளதோடு, பேருந்தின் சாரதியும், உதவியாளரும் காயமடைந்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்துக் காரணமாக சுமார் 30 நிமிடங்கள் கினிகத்தேனை - கண்டி வீதி ஊடான போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகியது.
குறித்த கனரக வாகனத்தின் சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாது போனதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளன.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.






