அழுத்தங்களுக்கு அடிபணியோம்! அமெரிக்காவுக்கு - கோட்டாபய அரசு பதில்
ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகத்தின் அழுத்தங்களுக்கு இலங்கை ஒருபோதும் அடிபணியாதென அமைச்சரவை பேச்சாளரும் வெகுசன ஊடக அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
ஜோ பைடன் தமது நாட்டில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முதலில் கவனம் செலுத்த வேண்டும், அதை விடுத்து பிற நாட்டு விடயங்களில் அவர் தலையிடக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இலங்கை தொடர்பான தமது நாட்டின் கொள்கைப் பிரகடனங்களை தெரிவித்திருந்தார்.
அவரது கருத்து தொடர்பில் - கருத்துரைக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். இலங்கையில் தற்போது மனித உரிமைகள் பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ள என்று ஜனாதிபதி நியமித்துள்ள புதிய ஆணைக்குழு ஆராய்ந்து நிரூபித்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த அரசு நீதியை வழங்கியே தீரும். இதில் மாற்றுக் கருத்து இல்லை.
இலங்கையின் உள்விவகாரங்களில் அமெரிக்காவோ அல்லது வேறெந்த நாடுகளோ தலையிட முடியாது.
அமெரிக்காவின் எல்லை மீறிய நடவடிக்கைகளால் தான் மனித உரிமை சபையில் இலங்கை பல நெருக்கடிகளை சந்தித்தது என்றார்.