இரவோடு இரவாக குருந்தூர் மலைக்கு விரைந்த அமைச்சர்கள் - சார்ள்ஸ் நிர்மலநாதன் கூறிய பதில்
அரச நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் தமிழர் பகுதிகளில் சில சட்டவிரோத செயற்பாடுகளை அமைச்சர்களும் பௌத்த பிக்குகளும் மேற்கொண்டு வருவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் (Charles Nirmalanathan) தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு - குருந்தூர்மலையில் தொல்லியல் அகழ்வு இடம்பெற்றுவரும் இடத்தில், சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு வரும் விகாரையில் 40 இற்கும் மேற்பட்ட பௌத்த பிக்குகள் மற்றும் அமைச்சர்கள் பிரித் ஓதல் மேற்கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் குமுளமுனை - தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலைக்கு நேற்று முந்தினம் வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க மற்றும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன ஆகியோர் திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் செய்திப்பிரிவு தொலைபேசியில் வினவியபோது,
குருந்தூர்மலையில் தொல்லியல் ஆய்வு மட்டுமே மேற்கொள்ளப்படும் என தேசிய மரபுரிமைகள், கலை கலாசார அலுவல்கள் அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் ஆய்வுகள் கொள்ளப்பட்டு அறிக்கை சமர்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை.
சட்டவிரோதமான முறையில் விகாரை அமைக்கப்பட்டு வருகின்றது. அது மட்டுமன்றி தண்ணிமுறிப்பு பிரதேசம் உட்பட குருந்தூர்மலையை சுற்றி பௌத்த பிக்குகளை குடியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.
மேலும் விவசாய நிலங்களையும் கையப்படுத்தும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டன. வன இலாக திணைக்களம் ஊடாக அதனை தடுத்து நிறுத்தியிருந்தோம்.
தமிழர் பிரதேசங்களின் கலாசாரங்கள் மற்றும் மத அடையாளங்களை அழிப்பதற்காக தற்போதைய அரசாங்கம் நிகழ்ச்சி நிரலைத் தயாரித்து செயற்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சி.பி.ரத்நாயக்க மற்றும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன ஆகியோர் குருந்தூர்மலைக்கு திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர் இது தொடர்பில் அடுத்தகட்ட நகர்வு குறித்து வினவியபோது,
இது தொடர்பாக தனியாக எதுவும் கூறமுடியாது ஆனால் கட்சியின் ஏனைய உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு நல்லதொரு முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 5 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்