குருந்தூர் மலை குறித்து போலி வரலாற்றுப் புனைவு : தொல்லியல் திணைக்களத்தை சாடும் ரவிகரன் எம்.பி
தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு - குருந்தூர் மலையை பௌத்த வரலாற்றுடனும், பௌத்த வரலாற்று நூலான மகாவம்சத்துடனும் தொடர்புபடுத்தி போலியான வரலாற்றுத் தகவல்கள் புனையப்பட்ட காட்சிப்பலகைகள் குருந்தூர் மலைப்பகுதிகளில் தொல்லியல் திணைக்களத்தால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமைக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் இதுதொடர்பில் அறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் குருந்தூர் மலைப்பகுதிக்கு நேற்று (15.10.2025) நேரடியாகச்சென்று நிலைமைகளைப் பார்வையிட்டதுடன், தொல்லியல் திணைக்களத்தின் இத்தகைய கட்டமைக்கப்பட்ட தமிழ் இனவழிப்புச் செயற்பாட்டிற்குத் தனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “குருந்தூர்மலையில் சில விளம்பரப் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தல் கிடைக்கப்பெற்றது அதற்கமையவே இப்பகுதிக்கு வருகை தந்தேன்.
புனையப்பட்ட காட்சிப்பலகைகள்
ஏற்கனவேயும் தமிழர்களின் பூர்வீக குருந்தூர் மலையை பௌத்த இடமென விவரிக்கும் வகையில் காட்சிப்பலகைகள் குருந்தூர்மலை அடிவாரத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில் 14.10.2025அன்று புதிதாக "குருண்டி தொல்லியல் தளம்" எனத் தலைப்பிடப்பட்டு போலியான பௌத்த வரலாறுகள் புனையப்பட்ட காட்சிப்பலகைகள் தொல்லியல் திணைக்களத்தினால் குருந்தூர் மலையின் அடிவாரம், குருந்தூர்மலையின் மேற்பகுதி மற்றும் குருந்தூர்மலையைச் சுற்றியுள்ள பகுதிகளிலுமாக மொத்தம் நான்கு இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.
இவ்வாறான போலியான வரலாற்று புனைவுகளை இங்கு நிறுவுவதை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றேன். குறிப்பாக எமது தமிழ் மக்கள் இந்தக் குருந்தூர்மலையை அண்டியுள்ள தண்ணிமுறிப்பு பகுதியில் பூர்வீகமாக வாழ்ந்துவந்ததுடன், இந்த குருந்தூர் மலையில் அமைந்திருந்த ஆதிசிவன் ஐயனாரை வழிபட்டுவந்துள்ளனர்.
இதுவே தண்ணிமுறிப்பினதும் குருந்தூர் மலையினதும் வரலாறாக இருக்கின்றது. இந்நிலையில் இந்த தண்ணிமுறிப்புப் பகுதியில் பூர்வீகக் குடிகளாக வாழ்ந்த எமது தமிழ் மக்கள் இன்னும் மீளக்குடியமர்த்தப்படவில்லை.
இத்தகைய சூழலில் தமிழர்களுடைய பூர்வீக வாழிடமான தண்ணிமுறிப்பையும், குருந்தூர்மலையையும் மகாவம்சத்துடனும், பௌத்த வரலாறுகளுடனும் தொடர்புபடுத்தி தொல்லியல் திணைக்களத்தினால் போலியானதொரு வரலாறு புனையப்பட்டு காட்சிப்பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ் மக்களுடைய பூர்வீக இடங்கள்
இவ்வாறாக போலியான வரலாறுகளைப் புனைந்து காட்சிப்பலகைகளை காட்சிப்படுத்துவது தொல்லியல் திணைக்களத்தினுடைய பணியில்லை. தொல்லியல் திணைக்களமென்றால் இந்தநாட்டில் சிங்களமக்கள், தமிழ்மக்களென்ற வேறுபாடின்றி வரலாறுகளை ஆராய்ந்து உண்மையான வரலாறுகளை பதிவுசெய்யவேண்டும்.
ஆனால் இலங்கையிலுள்ள தொல்லியல் திணைக்களம் பௌத்தர்களுக்கு சார்பாக போலியான வரலாற்றுபுனைகதைகளை உருவாக்குவது மற்றும் காட்சிப்படுத்துகின்ற செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுக்கின்றனர். இவ்வாறாக எம்மீது கட்டமைக்கப்பட்ட இனவழிப்புச் செயற்பாடுகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன.
குருந்தூர்மலை மற்றும் அதனை அண்டிய சகல இடங்களும் எமது தமிழ் மக்களுடைய பூர்வீக இடங்களாகும். தற்போதும் தொல்லியல் திணைக்களத்தால் அடாவடியாக ஆக்கிரமிக்கப்பட்ட இடங்கள் தவிர்ந்த ஏனைய இடங்களிலெல்லாம் தமிழ் மக்களே பயிர்ச்செய்கை மேற்கொண்டுவருகின்றனர்.
குறிப்பாக குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான 300ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் தொல்லியல் திணைக்களத்தினால் அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்டு எல்லைக்கற்கள் இடப்பட்டுள்ளன.
இவ்வாறு தொல்லியல் திணைக்களம் பாரிய அளவில் எமது தமிழ் மக்களின் குடியிருப்பு மற்றும் பயிர்ச்செய்கைக்காணிகளையும் அபகரித்து வைத்திருப்பதற்கு எந்த அவசியமும் இல்லை.
எனவே அந்தக் காணிகளும் விடுவித்து எமது தமிழ் மக்களிடம் கையளிக்கப்படவேண்டும். எமது தமிழ் மக்கள் தண்ணிமுறிப்பில் மீளக்குடியமர்த்தப்படவேண்டும் என்றே நாம் தொடர்சியாக கோரிவருகின்றோம்.
திட்டமிட்டு ஆக்கிரமிப்பு
எமது பூர்வீக தாயகத்தில் நாம் எமது வரலாறு, பண்பாடு, கலாச்சாரம், வாழ்வியல் வழிபாட்டு அம்சங்களுடன் நிறைவாக வாழ்வதையே விரும்புகின்றோம். ஆனால் எமது கட்டமைப்புக்களைச் சீர்குலைக்கின்ற வகையிலேயே கட்டமைக்கப்பட்ட தமிழ் இனவழிப்புச் செயற்பாடுகளை தொல்லியல் திணைக்களம் தொடர்ச்சியாகச் செயற்பட்டுவருகின்றது.
தொல்லியல் திணைக்களம் போலியாக வரலாறுகளைப் புனைந்துள்ள மகாவம்சக் காலத்திற்கு முன்பிருந்தே எமது தமிழர்கள் ஆண்ட இடங்களாக இந்த இடங்கள் காணப்படுகின்றன.
இந்த நாடு பெரும்பான்மை பௌத்தர்களின் ஆட்சியின் கீழ் இருக்கின்றதென்பதற்காக, பெரும்பான்மை பௌத்தர்களுக்கு ஏற்றவர்களுக்கு போலியான வரலாறுகளைப் புனைந்து தமிழர்களின் பூர்வீக வரலாற்றிடங்களைத் திட்டமிட்டு ஆக்கிரமிப்புச் செய்வதை ஒருபோதும் எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது. தொல்லியல் திணைக்களத்தின் இத்தகைய செயற்பாட்டை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
மேலும் இந்த குருந்தூர்மலையில் நீதிமன்ற கட்டளைகளையும் மீறி சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைக்கு பொறுப்பாகவுள்ள தேரரரும் இவ்வாறான அபகரிப்பு மற்றும் பௌத்த வரலாற்று புனைவுச் செயற்பாடுகளுக்கு முழு ஆதரவுடன் செயற்படுவதாக அறிகின்றோம்.
இவ்வாறாக பௌத்த துறவியாக இருப்பதற்கு அடிப்படைத் தகுதியே இல்லாத ஒருவரையே இங்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளது. அவருடைய அத்துமீறல்கள் மற்றும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புச் செயற்பாடுகளுக்கு எனது வன்மையான கண்டனங்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
மேலும் இத்தகைய வரலாற்றுப் புனைவுகளூடாக மேற்கொள்ளப்படும் கட்டமைக்கப்பட்ட தமிழ் இனவழிப்புச் செயற்பாடுகள் தொடர்பில் உரியவர்களின் கவனத்திற்கு கொண்டுவருவதுடன், இத்தகைய செயற்பாடுகளைத் தடுப்பதற்கும் எம்மாலான சகலநடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
