அநுர அரசுக்கு பெரும் சவாலாக மாறப்போகும் ரணில் - சஜித் கூட்டணி
இலங்கையின் ஜனநாயகப் பல் கட்சி முறைமையைப் பாதுகாப்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரே மேடைக்குக் கொண்டு வருவதே ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு (UNP) என அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.
மேலும் இந்த இலக்கை அடைவதற்காக ஐக்கிய மக்கள் சக்திக்கும் தமக்குமிடையிலான தூரத்தைக் குறைத்து, ஒற்றுமையுடன் செயற்பட உறுதி பூண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
நேற்று (15) விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு ஐக்கிய தேசிய கட்சி இந்த விடயத்தினை சுட்டிக்காட்டியுள்ளது.
ஒற்றுமையுடன் செயற்படுவதற்கு உறுதி
அந்த அறிக்கையில், “இலங்கையின் ஜனநாயகப் பல் கட்சி முறைமையைப் பாதுகாப்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரே மேடைக்குக் கொண்டு வருவதே ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடாகும்.
பல்கட்சி முறைமையைப் பாதுகாக்கும் போது அரசியல் கட்சிகளின் தனித்துவம் மற்றும் கொள்கைகளை பாதுகாக்கும் வகையில் செயற்படுவது முக்கியமாகும். இந்த நிலைப்பாட்டுக்கு வருமாறு அனைத்துக் கட்சிகளையும் நாம் கோருகிறோம்.
அதேபோன்று, மேற்குறிப்பிட்ட இலக்கை அடைவதற்காக ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் உள்ள தூரத்தைக் குறைத்து, ஒற்றுமையுடன் செயற்படுவதற்காகவும் நாம் உறுதிபூண்டுள்ளோம்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் நாம் கலந்துகொள்வோம். ஏனைய அரசியல் கட்சிகளுடனும் ஐக்கிய தேசிய கட்சி பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டியுள்ளது.
மேலும், எமது இரண்டு கட்சிகளுக்கிடையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஒரு குழுவை நியமிக்கும் யோசனைக்கும் நாம் இணக்கம் தெரிவிக்கின்றோம்.
ஐக்கிய மக்கள் சக்தி அண்மையில் வெளியிட்ட அறிக்கைகளையும், ஐக்கிய தேசியக் கட்சியின் அடிப்படைக் குறிக்கோளையும் கவனத்தில் கொண்டு எதிர்கால வேலைத்திட்டங்களை வகுக்கலாம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
