அநுர அரசிலும் தீர்வின்றி தொடரும் வனவள - தொல்பொருள் திணைக்களங்களின் காணி அபகரிப்பு
வனவள மற்றும் தொல்பொருள் திணைக்களங்களின் பெயரில் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்கள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளடக்கப்படுவதால், தமது வாழ்வாதாரமும் எதிர்காலமும் பாதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு - கிழக்கு காணி உரிமையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இராணுவம் உள்ளிட்ட அரச நிறுவனங்களினால் அபகரிக்கப்பட்ட, தடுக்கப்பட்டுள்ள காணிகளுக்கான உரிமைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு - கிழக்கின் காணி உரிமையாளர்கள் இன்று (28) யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்தனர்.
இந்த கலந்துரையாடலிலேயே காணி உரிமையாளர்கள் மேற்கண்ட விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த அரசாங்கங்களின் அணுகுமுறை
போருக்குப் பின்னரான காலப்பகுதியில் தமது பூர்வீக நிலங்களை மீளப்பெறுவதற்காக மக்கள் பல்வேறு போராட்டங்களையும் சட்டரீதியான முயற்சிகளையும் முன்னெடுத்து வருகின்ற போதிலும், பல பகுதிகளில் இதுவரை நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை எனவும் கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

''ஆட்சி மாறினாலும் நிலை மாறவில்லை” எனக் குறிப்பிட்ட பிரதிநிதிகள், புதிய அரசாங்கத்தின் காணிக் கொள்கை தொடர்பிலும் தமது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
கடந்த அரசாங்கங்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டியும், மக்களின் உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதாகவும் கூறியே புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததாகவும், ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் காணி விவகாரத்தில் கடந்த அரசாங்கங்களின் அணுகுமுறைகளிலிருந்து வேறுபட்ட நிலைப்பாடு தென்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
மக்களின் காணிகளைப் பாதுகாப்பதாகவும், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாகவும் அரசாங்கம் உறுதியளித்திருந்த போதிலும், நடைமுறையில் பல இடங்களில் பழைய நிலைமையே தொடர்வதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
'கடந்த அரசாங்கங்களின் குறைகளை கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கமும் அதே அரசியல் செயற்பாடுகளையே முன்னெடுத்தால், காணிகளை இழந்த மக்களுக்கு நம்பிக்கை எவ்வாறு ஏற்படும்?” என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்பியுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

