சுகாதாரத்துறைக்கு பேரிழப்பு - நாட்டிலிருந்து வெளியேறும் பெருமளவு வைத்தியர்கள்
இலங்கையில் பொருளாதார நெருக்கடி
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டை விட்டு வெளியேறுவோர் தொகை அதிகரித்த வண்ணம் உள்ளது.
குறிப்பாக வாழ்க்கைச் செலவை தாங்க முடியாமல் வெளிநாட்டு வேலைவாய்ப்பை தேடி நாட்டிலிருந்து வெளியேறுவோர் தொகையே அதிகரித்து காணப்படுகிறது.
இதற்காக நாளாந்தம் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் கடவுச்சீட்டை பெறவும் அதனை புதுப்பிக்கவும் ஏராளமானோர் காத்து கிடக்கின்றனர்.
வெளியேறும் மருத்துவர்கள்
இந்த நிலையில் பேரதிர்ச்சி தரும் செய்தியாக மற்றுமொரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பொருளாதார நெருக்கடி காரணமாக வெளிநாடு செல்லும் வைத்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையே ஆகும்.
இதனை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் ருவன் ஜயசிறி குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் குறித்த எண்ணிக்கை ஆயிரமாக அதிகரிக்கக் கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வைத்திய சபையின் ஊடாக வெளிநாடு செல்வதற்கான அனுமதி சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதன்போது 2,200 அனுமதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனூடாக வைத்தியர்கள் நாட்டை விட்டு சென்றதாக தெரிவிக்க முடியாது.
விசேட வைத்தியராக ஒருவர் பதிவு செய்வதற்கு முன்னர் வெளிநாட்டு பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்பதால் அவர்களில் அதிகமானோர் கற்றல் செயற்பாடுகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்தியக் குழு உறுப்பினர் வைத்தியர் ருவன் ஜயசிறி குறிப்பிட்டுள்ளார்.