வர்த்தமானி இரத்துடன் காணிகளுக்கு குத்தகை : மயிலிட்டி காணி விடுவிப்பு தொடர்பில் வலியுறுத்து!
வலி வடக்கு காணி உரிமம் தொடர்பில் இலங்கை அரசால் 2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி உடனடியாக இரத்துச் செய்யப்பட்டு மக்களின் காணி நிலங்கள் மக்களுக்குரியதென்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மனித உரிமை செயற்பாட்டாளரும் குறித்த விடையத்தின் ஏற்பாட்டாளருமான யே.யாட்சன் பிகிறாடோ மெசிடோ இதனைத் தெரிவித்தார்.
இவ்வாறு வர்த்தமானி இரத்து செய்யப்படாதவிடத்து இதுவரை விடுவிக்கப்பட நிலங்களும் சட்டபூர்வமாக மக்களுக்குரியதாக இல்லாது போகும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
இராணுவத்தின் பிடியிலுள்ள வலி வடக்கு காணிகளை விடுவிக்கக்கோரி, இன்று(21.07.2025) காணிகளை இழந்த வலி வடக்கு மக்களினால் ஊடக சந்திப்பு ஒன்று யாழ்.நகரில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதன்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
விடுவிக்கப்படவேண்டிய காணிகள் தெடார்பில் மாறுபாடான தகவல்
இன்னமும் 2808 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாக தெல்லிப்பளை பிரதேச செயலகம் கூறுகின்றது. ஆனால் யாழ் மாவட்டச் செயலகம் 2800 ஏக்கர் நிலம் என்று கூறுகின்றது.
இவ்விரு அரச நிறுவனங்களும் முதலில் ஒரு சமநிலையில் தகவல் பதிவை கொண்டிருக்க வேண்டும்.
அதேவேளை மாவட்ட செயலர் எதேச்சத்தனமாக தகவல்களையும் கூறக் கூடாது.
இதேநேரம் 2013 ஆம் ஆண்டு இது தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானியில் 6317 ஏக்கர் நிலம் இராணுவத்தின் பிடியில் இருப்பதாக கூறியிருந்தது. அத்துடன் அவை அனைத்தும் அரச காணிகள் என்றும் கூறுகின்றது.
வர்த்தமானியை உடனடியாக இரத்து செய்யவேண்டும்
இதேவேளை கடந்த ஆட்சியாளர்களால் பல ஏக்கர் நிலங்கள் விடுவிக்கப்பட்டன. அதேபோன்று வீதிகள், ஆலயங்கள் என்றும் மக்களிடம் கையளிக்கப்பட்டன.
ஆனால் இந்த வர்த்தமானியின் பிரகாரம் இன்னமும் அரச காணிகளாகவே மக்களின் காணிகள் இருக்கின்றன. எனவே குறித்த வர்த்தமானியை உடனடியாக இரத்து செய்யவேண்டும்.
மக்களின் காணிகளில் இராணுவம் விவசாயம்
இதற்கு இன்றைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு இரத்துச் செய்தால் மடுமே மக்களின் காணி மக்களுக்குரியதாகும். இல்லையேல் அவை சட்டவிரோதமானவையாகவே இருக்கும்.
மேலும் மக்களின் காணிகளில் இராணுவம் விவசாயம் செய்வதாகவும் கூறப்படுகின்றது அதன்படி காணிகளை விடுவிப்பதுடன் இவ்வளவு காலமும் அக்காணிகளை வைத்து விவசயம் உள்ளிட்ட நடவடிக்கைகளை செய்ததற்கான குத்தகை இழப்பீடும் உரிய நபர்களுக்கு வழங்குவதுடன் வர்த்தமானியையும் இரத்துச்செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
