சிறீதரன் முதலில் கிளிநொச்சியை விட்டு வெளியே வரவேண்டும்: ஐபிசி தமிழின் ஒரு திறந்த மடல்!
Kilinochchi
TNA
S. Sritharan
Election
ITAK
By Niraj David
பாரம்பரியம்மிக்க தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறீதரனுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்ற அதேவேளை, தமிழ் மக்களின் சார்பில் சில விடயங்களை அவருக்கு சுட்டிக் காண்பிப்பது ஒரு ஊடகமாக எங்களுடைய கடமையாகின்றது.
- தமிழரசுக் கட்சி என்பது தமிழ் மக்களால் தமிழ் மக்களுக்காகவென்று உருவாக்கப்பட்ட கட்சி என்கின்றதன் அடிப்படையில்தான் தமிழ் மக்களின் சார்பாக எமது மடல் அமைகின்றதே தவிர, இது ஒரு குறிப்பிட்ட குழுவின் கட்சி என்று நீங்கள் கருதினால், எமது மடலை தாரளமாக உதாசீனம் செய்யலாம்.
- தமிழ் மக்களின் ஜனநாயகவழிப் போராட்டத்திற்காகவென்று தமிழ் மக்களின் கனவுகளைச் சுமந்து ஒரு உயரிய நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவி என்பது கிட்டத்தட்ட ஈழத் தமிழர்களின் தேசிய ஆண்மாவை சுமக்கின்ற ஒரு முக்கிய பொறுப்பு என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.
- தமிழரசுக் கட்சி என்பது ஒரு தனிப்பட்ட நபரின் குடும்பச் சொத்து அல்ல. கடந்த சில ஆண்டுகளாக இருந்துவந்தது போன்று அல்லாமல், உட்கட்சி ஜனநாயம், தமிழ் மக்களின் அபிலாசைகள் சார்ந்த விழுமியங்களுக்கு முன்னுரிமை வழங்கி, பலதட்டு இராஜதந்திர அணுகுமுறைகளை(Multi track diplomacy) பேணுகின்ற ஒரு மக்கள் கூட்டியக்கமாக அந்த கட்சி கட்டமைக்கப்பட வேண்டும்.
- தமிழ் தேசியத்தை விட்டு விலகி நிற்கின்றவர்கள், தமிழ் தேசிய நீக்க அரசியலைச் செய்கின்றவர்கள், தமிழ் தேசியத்தை வெட்கமான ஒரு சொல்லாடலாகப் பார்க்கின்றவர்கள் அனைவரும் தமிழ் மக்களின் உயிர்மூச்சான தமிழரசுக் கட்சியைவிட்டு வெளியேற்றப்படுவது அவசியம்.
- ஒரு கட்சியின் தலைமை என்பது அந்த கட்சியில் நடைபெறுகின்ற அத்தனை விடயங்களுக்குமே பொறுப்புக் கூறவேண்டிய மிக முக்கியமான பதவி. கட்சி உறுப்பினர்களாக இருக்கட்டும், கட்சியின் பேச்சாளராக இருக்கட்டும், கட்சி சார்பில் தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கட்டும், கட்சியின் பொறுப்புக்களில், பதவிகளில் இருப்பவர்களாக இருக்கட்டும்- இவர்களில் யார் எப்படியான கருத்தினை வெளியிட்டாலும் அதற்கான முழுப் பொறுப்பையும் கட்சியின் தலைவராக நீங்கள்தான் ஏற்றாகவேண்டும்.
- கட்சியின் பேச்சாளர் என்று நியமிக்கப்படுபவர் வெளியிடுகிள்ற கருத்துக்கள் அத்தனையும் கட்சித் தலைவரின் அங்கீகாரம் பெற்ற பின்னரே வெளியிடப்படவேண்டும்.
- தமிழ் மக்கள் அரசியல்மயப்படுத்தப்படுவதற்கு முன்னுரிமை கொடுத்துச் செயலாற்றவேண்டும். தமிழ் மக்களை அரசியல்மயப்படுத்துவதில் மாத்திரம் வெற்றிகொண்டுவிட்டால், சலுகை அரசியலோ அல்லது பிரதேசவாத, சாதிவாத, மதவாத அரசியல்களோ தாமாகவே தமிழ் மக்களிடம் இருந்து அன்னியப்பட்டுவிடும்.
- மிக முக்கியமாக நீங்கள் ‘கிளிநொச்சி’ என்ற வட்டத்தை விட்டு வெளியே வரவேண்டும். வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் போராட்டங்கள் நடைபெற்றால் அங்கு நீங்கள் தலைமைதாங்கச் செல்லவேண்டும். குறிப்பாக கிழக்குக்கு நீங்கள் சென்று அந்த மக்களுக்கு உங்கள் தலைமைத்துவத்தை வெளிக்காண்பிக்கவேண்டும். ( உங்கள் 23 வருட அரசியல் வாழ்க்கையில் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், கொழும்பு தவிர மற்றைய பிரதேசங்களுக்குச்; சென்ற சந்தர்ப்பங்கள் மிக மிகக் குறைவு என்பதை உரிமையுடன் சுட்டிக் காண்பிக்க விரும்புகின்றோம்.
- புலம்பெயர் தேசங்களில் கட்சியின் கிளைகள் அமைக்கப்பெற்று புலம்பெயர் தமிழ்தேசியவாதிகள் உள்வாங்கப்படவேண்டும். புலம்பெயர் நாடுகளில் கட்சி வளர்க்கப்படவேண்டும்.
- கட்சிக்கென்று பல துறைசார் வல்லுனர் குழுக்கள் அமைக்கப்படல் வேண்டும். உதாரணத்திற்கு சட்டவிடயங்களைக் கையாளுவதற்கு, தமிழ்மொழி மேம்பாடு சார்ந்த விடயங்களைக் கையாளுவதற்கு, புவிசார் அரசியல் விடயங்களைக் கையாளுவதற்கென்று - துறைசார் வல்லுனர்களைக் கொண்ட தனித்தனி ஆலோசனைக் குழுக்கள் பல அமைக்கப்படவேண்டும்.
- தமிழீழத்தாயக தொழில் முதலீடுகளுக்கென்று ஒரு பொறிமுறை உருவாக்கப்படவேண்டும். உதாரணத்திற்கு, புலம்பெயர் நாடு ஒன்றில் இருந்து தாயகத்தில் முதலீட்டுக்காகவென்று வரும் ஒருவர் முதலீடு செய்யக்கூடிய தொழில்கள் அடையாளம்காணப்பட்டு, அவர் முதலிட்டு சில மாதங்களிலேயே இலாபத்தை ஈட்டக்கூடிய வரைபுத்திட்டங்களுடன் கட்சியின் தொழில் முதலீட்டுக் குழு தயார் நிலையில் இருக்கவேண்டும்.
- தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி பலமாகக் கட்டியெழுப்பப்படல் வேண்டும். கட்சியின் முன்னைய தலைவர் தனது மகனை முன்னிநிறுத்தியது போன்று அல்லாமல், தலைமைத்துவப் பண்புள்ள திறமைசாலிகள் இனங்காணப்பட்டு, அவர்களைக் கொண்டு இளைஞர் அணி கட்டியெழுப்பப்படல் வேண்டும்.
- அடுத்த தலைமையை ஏற்பதற்கு இளைஞர்களைத் தயார்செய்கின்ற மிகப் பெரிய பொறுப்பு உங்களுக்கு இருக்கின்றது. அதனை ஒரு அரசியல் கட்சியின் தலைவராக மாத்திரம் அல்லாமல் ஒரு ஆசிரியராக நீங்கள் செய்யவேண்டும்.
- தமிழரசுக் கட்சி என்பது வெறுமனே தேர்தல் அரசியலை மையப்படுத்தி மாத்திரம் இயங்கிக்கொண்டு இருக்காது, தமிழ் மக்கள் சார்ந்த ஒரு அரசியல் இயக்கமாகக் கட்டியெழுப்பப்படுவது அவசியம். உதாரணத்திற்கு தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியை ஒரு அரசியல் இயக்கம் போன்று செயற்படுத்தி மக்களைச் சென்றடையவைக்கலாம். அதனைச் செய்துமுடிப்பதற்கான தலைமைத்துவப் பண்பு உங்களைப் போன்ற ஆசானுக்கு இருக்கின்றது என்றே நம்புகின்றோம்.
இவைகள் அனைத்தும் உரிமையுடன் எமது தமிழ் மக்கள் சார்பாக முன்வைக்கப்படுகின்ற கோரிக்கைகளே.
ஏற்பதும், முன்னர் போல உதாசீனம் செய்வதுக்குமான உரிமை உங்களுக்கு இருக்கின்றது.
அதேவேளை, எந்த ஒரு அரசியல்வாதியையும் தூக்கி எறிவதற்கான உரிமை தமிழ் மக்களுக்கும் இருக்கின்றது என்பதை நினைவூட்டிக்கொண்டு, உங்களது கட்சித் தலைமை சிறப்புறவும், நல்ல வழிநடாத்துதலை தமிழ் மக்களுக்கு வழங்கவும் வாழ்த்திநிற்கின்றோம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி