ஜனவரியில் நடைபெறவுள்ள மற்றுமொரு தேர்தல்: துரித கதியில் ஏற்பாடுகள்
நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ளதுடன், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் அதற்கான ஏற்பாடுகளை தேர்தல்கள் ஆணைக்குழு விரைவில் ஆரம்பிக்கவுள்ளது.
இந்த தேர்தலுக்கு எட்டு பில்லியனுக்கும் அதிகமாக செலவாகும் என முன்னர் மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், தேர்தலை நடத்துவதற்கான நிதியைப் பெறுவதற்கு தேர்தல் ஆணையம் புதிய மதிப்பீடுகளை திறைசேரிக்கு அனுப்பும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க(ratnayake) தெரிவித்தார்.
தேர்தல் தொடர்பில் புதிய மதிப்பீடு
இது தொடர்பாக கொழும்பு ஊடகமொன்றிடம் அவர் கூறுகையில், தேர்தல் ஆணையம் முன்பு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு 2023 ஆம் ஆண்டு தேர்தலை நடத்துவதற்கான தயாரிப்புகளை மேற்கொண்ட போது, ரூ. 8 பில்லியன்கள் செலவாகும் என மதிப்பிட்டிருந்தது.
ஆனால் தற்போது தேர்தல் செலவு அதைவிட அதிகமாக இருக்கும் என்பதால், நாங்கள் புதிய மதிப்பீடுகளை அனுப்புவோம்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்குவதற்கு முன்பாக, நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த பின்னர், ஊழியர்களுக்கு சுமார் இரண்டு வாரங்கள் ஓய்வு அளிக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
முன்னைய வேட்புமனுக்கள் இரத்து
இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான முன்னைய வேட்புமனுக்களை இரத்துச் செய்து புதிதாக வேட்புமனுக்களை கோருவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் (திருத்தம்) சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என அமைச்சர் விஜித ஹேரத்(vijitha herath) தெரிவித்தார்.
"இது தொடர்பாக மற்ற கட்சிகளின் உடன்பாடு எங்களுக்கு தேவை. சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம், என்று அவர் கூறினார்.
2023 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்து செய்ய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக ஹேரத் கூறினார்.
வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டதிலிருந்து சூழ்நிலைகள் கணிசமாக மாறியுள்ளதால், முந்தைய வேட்புமனுக்களை ரத்து செய்யுமாறு பல தரப்பினர் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்ததாக அமைச்சர் விளக்கினார்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு
"இந்த நியமனங்கள் இப்போது கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகின்றன. சில கட்சிகள் வெவ்வேறு குழுக்களாக உடைந்து, சில வேட்பாளர்கள் வேறு கட்சிகளில் இணைந்துள்ளனர். சிலர் அரசியலை விட்டே ஒதுங்கிவிட்டனர். ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், எமது கட்சியைச் சேர்ந்த சில வேட்பாளர்கள் கூட நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்” என்று அமைச்சர் கூறினார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளுமாறு இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |