“பெரிய காவல்துறை படையை பயன்படுத்தி அடக்குமுறை” இதுவே அரசின் தீர்மானம் - எழுந்தது கண்டனம்!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைப்பதற்கு எதிராக தேசிய மக்கள் சக்தியினால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தொழிற்சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.
மேலும் பெரிய காவல்துறை படையைப் பயன்படுத்தி மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதில் அரசாங்கம் தெளிவான நிலையில் உள்ளதாக, தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் அறிக்கை ஒன்றின் ஊடாக சுட்டிக்காட்டியுள்ளன.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
“நீக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ள பயங்கரவாதச் சட்டத்தைப் பயன்படுத்தி, பொதுச் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காகவென தெரிவித்து நீதிமன்ற உத்தரவுகளைப் பெறுவதும் அரசாங்கத்தின் அடக்குமுறையின் புதிய அம்சம்” எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகளை மீறும் அரசாங்கம்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் சமூகத்தில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் காணப்பட்டாலும், அதை ஒத்திவைப்பதற்கு எதிரான போராட்டங்களைத் தடை செய்வது அல்லது ஒடுக்குவது அடிப்படை மனித உரிமையை மீறுவதாகும் என, சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொது சேவை ஊழியர் சங்கம், இலங்கை சுதந்திர சேவையாளர் சங்கம், இலங்கை தொழிற்சங்க சம்மேளனம், ஐக்கிய தொழிலாளர் சம்மேளனம், இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம், இலங்கை வங்கி ஊழியர் சங்கம், நிறுவனங்களுக்கு இடையிலான ஊழியர் சங்கம் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் கூட்டாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளன.
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் இவ்வாறு கருத்து வெளியிடும் உரிமை மற்றும் போராட்டங்களை ஒடுக்க நினைத்தால், சமூகம் ஸ்திரமற்றதாகி பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வாக்குறுதிகள் வெறும் வாக்குறுதிகளாவே மாறிவிடும்.
கண்ணீர்ப்புகையால் வேட்பாளர் மரணம்
கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை என்பவற்றைப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதலில் காயமடைந்த தேசிய மக்கள் சக்தியின் நிவித்திகல பிரதேச சபைக்கான வேட்பாளர் நிமல் அமரசிறி, கண்ணீர்ப்புகை காரணமாகவே சுவாசப் பிரச்சினைகளால் உயிரிழந்தார்.
காவல்துறையின் தாக்குதலில் படுகாயமடைந்த 46 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான அஜித் கமகே கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக, இலங்கை ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு (JDS) தனது டுவிட்டர் பதிவொன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
