இஸ்ரேலில் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் விசா இன்றி அந்தரிப்பு
இஸ்ரேலில் விசா இல்லாமல் சுமார் ஐயாயிரம் இலங்கையர்கள் இருப்பதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
முந்தைய அரசாங்கத்தின் சில அமைச்சர்களின் ஏற்பாடுகள் காரணமாக அவர்களுக்கு விசா வழங்குவதற்கான தனது முயற்சிகள் முறியடிக்கப்பட்டன என்றும் தூதுவர் கூறியுள்ளார்.
இஸ்ரேலில் இலங்கை பத்திரிகையாளர்கள் குழுவை சந்தித்தபோது அவர் மேற்கண்ட விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
தொழிலாளர் பற்றாக்குறை
இதற்கிடையில், இஸ்ரேலில் சுமார் இரண்டு லட்சம் தொழிலாளர் பற்றாக்குறை இருப்பதாகவும் தூதுவர் நிமல் பண்டார வெளிப்படுத்தியுள்ளார்.
குறிப்பாக கட்டுமானம் மற்றும் ஹோட்டல் துறைகளில் வேலைகளுக்கு தொழிலாளர்கள் தேவைப்படுவதாக அவர் பத்திரிகையாளர்களிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
வேலை வாய்ப்புகள்
இஸ்ரேலில் தற்போது இலங்கையர்கள் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அடுத்த டிசம்பருக்குள் சுமார் நான்காயிரம் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் தூதுவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும், மனித கடத்தல்காரர்கள் தற்போது சட்டவிரோத வேலைவாய்ப்பை வழங்குவது ஒரு பிரச்சனை என்றும், சில இலங்கை வேலை தேடுபவர்கள் மது மற்றும் போதைப்பொருட்களுக்கு அடிமையாகி பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
