மீண்டும் சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு
கொழும்பின் புறநகரில் உள்ள சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் நாளை முதல் மீண்டும் மூடப்படவுள்ளது.
இந்தச் சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதால் நாட்டின் மின் உற்பத்திக்கு தேவையான உலை எண்ணெய்யை பெற முடியாமல் போகும் என்பதுடன், மின்சார விநியோக இடையூறுகளும் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கொழும்பின் புறநகரான சபுகஸ்கந்தயில் உள்ள 51 வருடங்கள் பழமை வாய்ந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் ஊடாக 37 வீதமான எரிபொருள் உற்பத்தி செய்யப்படுகிறது.
குறிப்பாக தேசிய எரிபொருள் விநியோக கட்டமைப்பில் 14 சதவீத பெற்றோலும், 29 சதவீத டீசலும் சப்புகஸ்கந்த நிலையத்தில் இருந்து விநியோகிக்கின்றது.
இந்த நிலையில், மசகு எண்ணெய் கொள்வனவு செய்வதற்கு டொலர் பற்றாக்குறை நிலவுவதை அடுத்து சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும் சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதால் நாள் ஒன்றுக்கு 06 இலட்சம் டொலர் நிதியிழிப்பு ஏற்படும் என பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தேசிய ஊழியர் சங்கம் எச்சரித்துள்ளது.
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை நிறுத்தும் நடவடிக்கை எதிர்காலத்தில் மின்வெட்டுக்கு வழிவகுக்கும் என சங்கத்தின் செயலாளர் சங்கத்தின் ஆனந்த பாலித்த எச்சரித்துள்ளார்.
நீரேந்து பகுதிகளில் உள்ள நீர்தேக்கங்களின் நீர்மட்டமும் 40 வீதத்தால் குறைந்துள்ளதாக மின்சார சபை தெளிவாக கூறியுள்ளதால், மீண்டும் திட்டவட்டமான மின்வெட்டு ஏற்படும் என அவர் கூறியுள்ள நிலையில், சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்படவுள்ளது.
எனினும் சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகளை இந்த மாத இறுதியில் மீள ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.