தளர்கிறது ஊரடங்குச் சட்டம் - வெளியான அறிவிப்பு
கொரோனா தொற்றானது தீவிரமடைந்ததை அடுத்து இலங்கை முழுவதிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுவந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் 42 நாட்களின் பின்னர் நாளை மறுதினத்திலிருந்து முழுமையான நீக்கப்படவுள்ளது.
இதற்கான ஆலோசனையை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ வழங்கியதாக கொவிட் 19 ஒழிப்பு செயலணியின் பிரதானியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இலங்கையில் கொவிட் தொற்றின் வேகமான பரவல் காரணமாக தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் கடந்த ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி இரவு 10.00 மணிக்கு அறிவிக்கப்பட்டது.
எனினும் கொவிட் மரணங்களும், தொற்றாளர்களின் எண்ணிக்கையும் வீழ்ச்சியடைந்துவரும் நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் தனிமைப்படுத்தல் ஊரடங்கை எதிர்வரும் முதலாம் திகதி அதிகாலை 4 மணிக்கு நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதியும், கொவிட்-19 தேசிய செயலணியின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா இன்று ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள விசேட அறிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் பின்பற்றப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் மற்றும் சுகாதார வழிகாட்டல்கள் நாளை மறுதினம் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக திருமண நிகழ்வு மற்றும் மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளை நடத்த எதிர்வரும் ஒக்டோபர் 15ஆம் திகதி வரை தடைவிதிக்கப்படும் என்று தெரியவருகின்றது.
அதேபோல தற்போதும் நடைமுறையிலுள்ள மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்களும் எதிர்வரும் 15ஆம் திகதிவரை தொடர்ந்தும் இருக்கும் என அரச மட்டத்தகவல்கள் தெரிவிக்கின்றன.