யாழில் புறக்கணிக்கப்படும் மாவட்ட செயலக தீர்மானம்: பொதுமக்கள் விசனம்
யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகள் ஒலிபெருக்கி தொல்லையினால் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து காவல்துறையிருக்கும் அறிவித்தும் எந்த நடவடிக்கையை எடுக்கப்படவில்லை என்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலருடன் தொடர்புகொள்ள முயற்சி மேற்கொண்டபோதும் அது பலனளிக்கவில்லை எனவும் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இவ்வாறானதொரு பின்னணியில், கடந்த ஆறாம் திகதி யாழ்.மாவட்ட சுற்றாடல் பாதுகாப்புக் குழுவின் கூட்டத்தில் யாழ்.மாவட்டத்தில் அதிகரித்துள்ள ஒலிபெருக்கி தொல்லை தொடர்பில் பொதுமக்களினால் தொடர்ச்சியாக மாவட்டச்செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைவாக அதனை கட்டுப்படுத்திவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.
பொதுமக்களுக்கு அசௌகரியம்
அத்தோடு, குறித்த கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டது.
பல பிரதேச செயலகப் பிரிவுகளில் ஓரளவு மாற்றம் ஏற்பட்டிருந்தாலும், சில பிரதேச செயலக பிரிவுகளில் ஒலிபெருக்கி பாவனையின் மோசமான செயற்பாடுகள் தொடர்ந்த வண்ணமே உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், இம்மாதம் 16 ஆம் திகதி சண்டிலிப்பாய் பிரதேச செயல பிரிவிற்குட்பட்ட மாதகல் புனித லூர்துமாமதா ஆலய திருவிழாவில் மாதகலிலிருந்து பண்டத்தரிப்பு சந்திவரை 3 கிலோமீற்றர் நீளத்திற்கும் அதிகமாக ஏராளமான ஒலிபெருக்கிகளை பொருத்தி இரவு பகலாக பயன்படுத்தப்பட்டுள்ளன.
அதன் காரணமாக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்குள்ளானதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
உதாசீனப்படுத்தப்படும் தீர்மானம்
அத்துடன், நேற்று (26-02-2025) இதே பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட விளான் - சண்டிலிப்பாய் வீதியலுள்ள பிரான்பற்று நரசிம்ம வைரவர் என்ற சிறிய ஆலயம் ஒன்றில் அன்னதான நிகழ்விற்காக 15 இற்கும் அதிமான ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டு நேற்று முன்தினம் இரவு முதல் (25-05-2025) அதிக இரைச்சலுடன் ஒலி எழுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, இன்றையதினமும் அந்த பகுதியில் ஒலிபெருக்கி இசைக்கப்படுகிறதாகவும் இதனால் அருகிலுள்ளவர்கள் மட்டுமன்றி் அயல் கிராமங்களிலுள்ள மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில், சுற்றாடலை பாதிக்கும் ஒலி மாசு தொடர்பில் மாவட்ட செயலகத்தினல் எடுக்கப்பட்ட தீர்மானம் சில பிரதேச செயலகங்களுக்கும் காவல் நிலையங்களுக்கும் அறிவிக்கப்படவில்லையா அல்லது தீர்மானம் உதாசீனம் செய்யப்படுகின்றதா என பொதுமக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





