'எந்த தேர்தலுக்கும் தயார் - வெற்றியும் எமக்கே' : மார்தட்டுகிறது பெரமுன
சிறிலங்கா பொதுஜன பெரமுனவால் எந்தவொரு தேர்தலிலும் வெல்ல முடியும் என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன 70 வீதத்திற்கும் அதிகமான வாக்காளர் தொகுதிகளில் தன்னை மறுசீரமைத்துள்ளதால் வெற்றிவாய்ப்பு அதிகமாகவே இருப்பதாக அவர் கூறுகிறார்.
பொல்கஹவெலவில் இடம்பெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இவ்வாறு தெரிவித்தார்.
அதிக பெரும்பான்மை

“பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் மீண்டும் தேர்தல் தொகுதிக்கு செல்ல முடியாது என பலர் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு நாங்கள் தாக்கப்பட்ட பிறகு பலரும் நினைத்தது இப்படி தான்.
எவ்வாறெனினும் 70 வீதத்திற்கும் அதிகமான தேர்தல் தொகுதிகளில் எம்மை மறுசீரமைக்க முடிந்துள்ளது.
பொதுஜன பெரமுன குருநாகல் மாவட்டத்தில் 200,000 க்கும் அதிகமான பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷ அதிக விருப்பு வாக்குகளைப் பதிவு செய்வார்.
பொதுஜன பெரமுனவின் 11 உறுப்பினர்கள் குருநாகல் மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு செல்லவுள்ளனர். நாம் எந்த தேர்தலுக்கும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம்” - என்றார்.