தேசியத் தலைவர் பிரபாகரனும், கொரில்லா போர் முறையும்
ஈழத் தமிழ்ச் சமூகத்தை வரலாறு எங்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறதோ அங்கிருந்துதான் அது தனது அடுத்த அடியெடுத்து பயணத்தைத் தொடர முடியும்.
வரலாறு எதனை எம்மிடம் கையளித்ததோ அதனை வைத்துக்கொண்டுதான் அதிலிருந்து புதிய வரலாற்றைப் படைக்க முடியும். இல்லாததில் இருந்து புதிதாக எதனையும் உருவாக்கிட முடியாது. எது எம்மிடம் உள்ளதோ அதுவே எமது செயலையும் அதன் விளைவையும் தீர்மானிக்கின்றது.
அந்த வகையில்தான் தமிழீழ விடுதலைக்கான சாத்வீக வழியிலான போராட்டத்தின் தோல்வி ஆயுத வழியிலான கொரில்லா போர்முறை வழியிலான ஆயுதப் போராட்டத்தை இளைஞர்களின் கையில் திணித்துவிட்டது.
தமிழர் சேனையின் வீழ்ச்சி
1619 - 1621 வரை போர்த்துக்கேய தளபதி பிலிப் டீ ஒலிவேராவினால் யாழ்ப்பாண இராச்சியத்தை ஆக்கிரமிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட படையெடுப்புக்கு எதிராக போரிட்ட தமிழர் சேனையின் நல்லுர் இராச்சியத்தின் தளபதிகளில் ஒருவரான வருணகுலத்தான் போர்க்களத்தில் வீரச்சாவை தழுவியபோது தமிழர்களின் இறைமை தமிழ் மக்களிடம் இருந்து கைநழுவி அந்நியர்களிடம் சென்றுவிட்டது.
இதனால், ஐரோப்பிய காலனித்துவ ஆட்சியாளரிடம் இலங்கைத்தீவு 400 ஆண்டுகளுக்கு மேலாய் அடிமைப்பட்டுக் கிடந்தது.
போர்த்துக்கேய, ஒல்லாந்தகளின் இலங்கைத்தீவிற்கான நிர்வாகம் என்பது தமிழர் தாயகம் தனியாகவும், சிங்கள தேசம் தனியாகவுமென வேறுபட்ட நிர்வாக அலகுகளாக ஆளப்பட்டு வந்தன. ஆனால் 1833 இல் கோல்புரூக் கமருன் அரசியல் திட்ட சீர்திருத்தத்தின் மூலம் இலங்கைதீவு ஒற்றையாட்சி நிர்வாக அலகின் கீழ் பிரித்தானியரால் பிணைக்கப்பட்டுவிட்டது.
காலனித்துவ ஆட்சியாளர்களிடமிருந்து இலங்கைத்தீவு சுதந்திரம் அடைந்தபோது தமிழ் தேசிய இனம் தனது இறைமையை தனித்துவமாக பெற்றிருக்க வேண்டும். ஆனால் அன்றையகால நீண்டதூர அரசியல் தரிசனமற்ற அரசியல் தலைவர்களினால் இலங்கைத்தீவில் தமிழ் தேசிய இனம் தனது இறைமையை சிங்கள தேசத்திடம் பறிகொடுத்துவிட்டது.
சிங்கள தேசத்திடம் தமிழ்த் தேசிய இனம் தனது இறமையை மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக மேற்கொண்ட சாத்வீக வழியிலான போராட்டங்கள் அனைத்தும் தோல்வி அடைந்தன.
ஆயுதப் போராட்ட ஆரம்பம்
சாத்வீகப் போராட்டத்தின் தோல்வியின் விளைவாக 1970களில் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். இந்த இளைஞர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அந்த வகையில் ஒவ்வொருவரிடமும் வேறுபட்ட போராட்ட வடிவங்களும், சிந்தனைகளும், யுத்திகளும் தோன்றலாயின. சில இயக்கங்கள் போராளிகளை பயிற்றுவித்து ஒரேநாளில் எதிரிக்கு எதிரான போரை நடத்துவது என்றும் ஒரே நேரத்தில் விடுதலையை பெற்றுவிடலாம் என்றும் கற்பனாவாதத்தில் திளைதிருந்தன.
ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் போராளிகளை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுத்தி எதிரியிடமிருந்து ஆயுதங்களை கைப்பற்றவும், பெரும் எதிரிப் படைகளுக்கு எதிராக தாக்கிவிட்டு ஆயுதங்களைக் கைப்பற்றிக்கொண்டு தப்பியோடும் தந்திரங்களை தொடர்ந்து கடைப்பிடிப்பதன் மூலம் ஒரு நீண்ட போர்ப் பயிற்சியை போராளிகளுக்கு வழங்கவும், அவர்களுடைய போராடும் திறனை அதிகரிக்கவும், உளவரணை அதிகரிக்கவும் முடியும்.
அதே நேரத்தில் மக்களையும் விடுதலைப் போருக்கு தயார்படுத்தலாம். இதன் மூலம் மக்களை விடுதலைக்கு தகுதியானவர்களாக மாற்றிவிடலாம் என்ற சித்தாந்தத்தையும் அதன்பால் உறுதியான நம்பிக்கையையும் கொண்டிருந்தனர்.
"வரலாற்றில் தனி நபர்களுக்கு என்று ஒரு எல்லைக்குட்பட்ட ஒளிப்பான துலக்கமான ஒரு வகிபாகமுண்டு. துலக்கமான வகிபாகம் இருக்கின்றது என்பதற்காக எத்தகைய அசகாய சூரன் ஆயினும், வீராதி வீரன் ஆயினும் மக்களின் திராட்சி இன்றி அவர்களின் ஒருமித்த இயங்கு சக்தியின்றி தனித்து நின்று எதனையும் சாதித்துவிட முடியாது" என்று வரலாறு பற்றிய ஒரு கூற்று உண்டு.
இந்த வகையில் திரளாக திரண்ட ஈழத்தமிழ் இளைஞர்களின் மனித ஆற்றலை தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் அந்தக் காலத்தின் சூழலுக்கு இசைவாக பெரும் சக்தியாக உருத்திரட்டினார்.
"சுதந்திர தமிழீழம்" என்ற உன்னத இலட்சியம்
அதேவேளை இன்னொரு புறம் தமிழீழ மக்களின் விடுதலைக்காகவும், வளமான, செழுமையான எதிர்காலத்திற்காகவும் தமது வாழ்நாளை அர்ப்பணித்து போராடப் புறப்பட்ட இளைஞர்களில் ஒரு தொகுதியினர் அவர்கள் பின்பற்றிய தலைமைகளினால் வழிதவறிப்போயினர்.
ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் "சுதந்திர தமிழிழம்" என்ற உன்னத இலட்சியத்தை வரித்துக்கொண்டு ஆயுதப் போராட்டத்தை வழிமுறையாக ஏற்று, கொரில்லாப் போரியல் முறையை தேர்தெடுத்து தமிழர் தாயத்தின் பெரும் பகுதியை தமது பட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார்.
சுமார் 363 ஆண்டுகால அந்நியப் படைகள் மற்றும் அரசுகளின் அதிகாரத்தின் கீழ் இருந்த யாழ். குடாநாடு 1985 ஆம் ஆண்டு மீண்டும் தமிழர் சேனையின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.
இந்த அதிகார மாற்றத்தை செய்து காட்டியது தலைவர் பிரபாகரன் கைக்கொண்ட கொரில்லாப் போர் உத்தியின் படிமுறை வளர்ச்சிதான். ஒரு கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை முதலில் உருவாக்கும் நோக்கோடுதான் கொரில்லா போர் முறையை தலைவர் பிரபாகரன் தெரிவு செய்து இருந்தார்.
அன்றைய காலத்தில் ஈழத்தமிழர்களின் விடுதலைக்கு பொருத்தமான ஆயுதப் போராட்ட வழியாக கொரில்லாப் போர்முறை உத்தியே (Hit and run tactics) பொருத்தமானதாகவும் இருந்தது.
கொரில்லாப் போர் உத்தி
காலச் சூழ்நிலைக்குப் பொருத்தமான தெரிவை தலைவர் பிரபாகரன் தெரிவு செய்ததன் மூலம் தமிழீழ விடுதலைப் போராட்ட அரங்கில் தன்னை முதன்மையானவராகவும், நம்பிக்கைக்கு உரியவராகவும், தமிழீழ மக்களின் விசுவாசத்துக்கு உரியவராகவும் முன்நிறுத்தியது.
எதிரியைத் தாக்கிக் கொன்றுவிட்டு அவனது ஆயுதத்தை கைப்பற்றிக் கொண்டு தப்பி ஓடுவது என்ற கொரில்லாப் போர் உத்தி போராளிகளின் இழப்பை பெருமளவு தவிர்த்தது.
அதேநேரத்தில் எதிரியை வீழ்த்தி அவனை உளரீதியாக அச்சம் அடையச் செய்தது. சில போராளிகளினால் இலங்கைத்தீவு முழுவதையும் ஆட்டங்காணச் செய்ய முடிந்தது. அரச இயந்திரத்தை முடக்கவும் முடிந்தது.
பெரும் காவல்துறை, இராணுவ படையோடு அதிகாரம் செலுத்தும் அரசை சில போராளிகளினால் அதன் நிர்வாக இயந்திரத்தை முடக்கவும் ஸ்தாபிதம் அடையச் செய்யவும் முடியும். இதனை தமிழீழப் போர் அரங்கில் விடுதலைப்புலிகள் செய்து காட்டினர்.
எதிரிகளை தொடர்ந்து அச்ச நிலையில் வைத்திருக்க போராளிகளால் முடிந்தது. அதே நேரத்தில் கொரில்லா போராளிகளினால் சர்வ சாதாரணமாக மக்கள் மத்தியில் நிம்மதியாகவும் அமைதியாகவும் எந்த தங்கு தடையும் இன்றி தமது கருமங்களை ஆற்றவும் முடிந்தது.
"கொரில்லா போராளி எதிரியைக் கொல்வதற்கு அதிர்ஷ்டம் ஒருமுறை கிடைத்தால் போதும். ஆனால் எதிரிக்கோ தப்பித்து வாழ எப்போதும் அதிர்ஷ்டம் இருக்க வேண்டும்" என கொரில்லாப் போர்முறைத் தந்திரம் கூறுகிறது. இதுவே தமிழீழப் போர் அரங்கில் சிங்களப் பேரினவாத அரச இயந்திரத்துக்கும், இராணுவத்துக்கும் நேர்ந்தது.
பெரும் உளவியல் யுத்தம்
விடுதலைப் புலிகள் எப்போது தாக்குவார்கள், எங்கு தாக்குவார்கள் என்ற பயப்பீதியில் அரச படைகளை வைத்திருப்பது என்பது ஒரு பெரும் உளவியல் யுத்தம். அதனை கொரில்லா போர்முறை நிரூபித்தது.
நடந்தும், சைக்கிளிலும் வந்து செவியை பிடித்து அதிகாரம் செலுத்திய காவல்துறை படை , பின்னர் ஜீப் வண்டிகளில் வரவேண்டிய நிலையும், அது பின்னர் ஜீப்வண்டித் தொடர் அணியாக வரவேண்டிய நிலையும் ஏற்பட்டது.
யாழ் காவல்நிலை நிலையத் தாக்குதலுடன் காவல்துறை படையின் யுகம் தமிழர் தாயக மண்ணில் ஏறக்குறைய முடிவுக்கு வந்தது.
அதனைத் தொடர்ந்து காவல்துறை தொடர் வண்டிகள் நிறுத்தப்பட இராணுவ கவச வாகனங்களுடன் அரசபடைகள் நடமாட வேண்டிய நிலைக்கு இந்தக் கொரில்லா போர் உத்தி ஒரு பெரும் வளர்ச்சியை நோக்கிச் சென்றது.
தமிழீழப் போர் அரங்கில் கொரில்லா போர் உத்தி ஒரு தொடர் படி முறையான வளர்ச்சிக்கும் மாற்றத்துக்கும் உட்பட்டது. இராணுவத்தை நேருக்கு நேர் நின்று மோதி தடுத்து நிறுத்தவும், துரத்தி அடிக்கும் நிலைக்கும் உயர்ந்தது.
கொரில்லாப் போர்முறை உத்தியின் உச்சகட்டமாக 1985 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் யாழ் கோட்டை, பலாலி, காங்கேசந்துறை, வல்வெட்டித்துறை, நாவற்குழி இராணுவ முகாம்கள் என்பன போராளிகளினால் முற்றுகையிடப்பட்டன.
அத்தோடு ஆனையிறவு இராணுவ முகாமில் இருந்து யாழ் நோக்கி நகர முடியாது தடுப்பு தாக்குதல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டதன் மூலம் யாழ் குடாநாடு போராளிகளின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தது.
தமிழீழப் போர் அரங்கில் கொரில்லாப் போர் உத்தி தனது முதலாம், இரண்டாம் கட்டங்களை பூர்த்தி செய்து மூன்றாம் கட்டத்தில் ஒரு பிரதேசத்தை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் நிலைக்கு பரிணாம வளர்ச்சி ஏற்பட்டது.
இந்திய - இலங்கை ஒப்பந்தம்
இந்திய - இலங்கை ஒப்பந்தமும், அதனைத் தொடர்ந்த இந்திய இராணுவ - விடுதலைப் புலிகள் யுத்தமும் தொடர்ந்து கொரில்லாப் போர் உத்தியின் மூன்றாம் கட்ட நிலையிலேயே இருந்ததை வரலாறு நிரூபிக்கிறது.
ஆனால் உலக அரசியலில் ஏற்பட்ட மாற்றமும், பனிப் போர் முடிவும், அதன் தாக்கம் சர்வதேச ரீதியிலும் இலங்கை - இந்திய உள்நாட்டு அரசியலிலும் ஏற்பட்ட மாற்றங்கள் இந்தியப்படை வெளியேற்றத்துடன் தமிழீழத்தில் மேற்கொள்ளப்பட்ட கொரில்லாப் போர் உத்தியானது அதன் நான்காம் கட்டமாக இறுதிநிலை வடிவத்தை எட்டியது.
1990ஆம் ஆண்டுக்கு பின்னர் கொரில்லாப் போராளிகள் என்ற நிலையிலிருந்து மாற்றமடைந்து ஒரு நிரந்தர இராணுவ சீருடை தரித்த தமிழர் இராணுவமாக தமிழீழ விடுதலைப் புலிகளை வளர்ச்சி அடையச் செய்தது.
தமிழர் தாயகத்தின் 70 வீதமான நிலப்பரப்பு தமிழர் சேனையின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரும் அளவிற்கு அது வளர்ந்து சென்றது்.
ஆகாய கடல் வெளி இராணுவ நடவடிக்கை
1991ஆம் ஆண்டு ஆனையிறவு மீட்புச் சண்டையை "ஆகாய கடல் வெளி இராணுவ நடவடிக்கை" என விடுதலைப்புலிகள் பெயரிட்டு நடாத்திய யுத்தம் என்பது இலங்கைத்தீவில் இரண்டு இராணுவங்கள் உள்ளன என்பதை சர்வதேசரீதியில் நிரூபித்துக் காட்டியது.
அது உலகெங்குமுள்ள அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் விடுதலைக்கான போராட்டப் பாதையில் நம்பிக்கையை ஊட்டியது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை விடுதலைப் புலிகள் இயக்கம், கொரில்லாப் போர் யுத்தியின் அடிப்படையில் ஆரம்பித்து படிமுறை வளர்ச்சியினூடாக ஒரு மரபுவழி இராணுவமாக கட்டமைத்தது. அது தொடர்ந்து ஒரு தேசக்கட்டுமானத்தை நோக்கி வளர்த்து சென்றது.
தமிழ் மக்களை ஒன்றிணைந்து, அரவணைத்து, சிறந்த நிர்வாகக் கட்டமைப்புக்களை உருவாக்கி ஒரு முன்னுதாரணமான சிறந்த ஆட்சி அமைப்பை நிர்வகிக்கும் திறனை வெளிக்காட்டியது.
"தனது மக்களையும், மண்ணையும், பண்பாட்டையும், ஜனநாயகத்தையும், பாதுகாப்பையும், வாழ்க்கைமுறையும், அறிவியலையும், சமூக சமத்துவத்தையும், சமூக ஒருமைப்பாட்டையும் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான பாதையில் ஒரு தேசிய திரட்சியாய் முன்னெடுக்க வல்லவன் எவனோ அவனே தேசியத் தலைவனாவான்"
அத்தகைய தலைவன் உள்ளும் புறமும் அனைத்துவகை ஆதிக்கத்திலிருந்தும் மக்களைக் காக்கவல்ல கவசமும் ஆவான்.
இத்தகைய அனைத்து அம்சங்களையும் தன்னகத்தே கொண்டு கொரில்லாப் போர் முறையின் அடிப்படையிலான படிமுறை வளர்ச்சியால் தமிழீழ மக்களினால் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் "தமிழீழ தேசியத் தலைவர்" என்ற உயரிய ஸ்தானத்தில் வைத்து மதிக்கத் தக்கவரானார்.
- தி.திபாகரன் -
